ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்!

சாவாப்புகழ்பெற்ற கவிஞர் கண்ணதாசன், நீண்ட பல ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படம் ஒன்றுக்கு எழுதிய பாடலில், “ஊருக்காக வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்” என்று ஒரு வரி உண்டு.

Update: 2023-06-28 19:55 GMT

சாவாப்புகழ்பெற்ற கவிஞர் கண்ணதாசன், நீண்ட பல ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படம் ஒன்றுக்கு எழுதிய பாடலில், "ஊருக்காக வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்" என்று ஒரு வரி உண்டு. சமுதாயத்தில் போற்றப்பட வேண்டியவர்கள் போற்றப்பட வேண்டும், புகழப்பட வேண்டியவர்கள் புகழப்பட வேண்டும், நினைவுகூரப்பட வேண்டியவர்கள் நினைவுகூரப்பட வேண்டும்.

அந்தவகையில், தமிழ்நாட்டின் மீதும், தமிழக மக்கள் மீதும் அதிக அன்பு கொண்ட முன்னாள் பிரதமர், சமூகநீதி காவலர் வி.பி.சிங்குக்கு சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் முழு உருவ கம்பீர சிலை அமைக்கப்படும் என்று, அவரது பிறந்த நாளாம் கடந்த 25-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது, பெருமைக்குரியது. இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டபோது தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு மட்டும் மத்திய அரசு பணியிடங்களில் தனி இடஒதுக்கீடு வழங்கும் பிரிவு இடம் பெற்றிருந்தது. ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்பவும், சமூக பொருளாதார நிலைக்கு ஏற்பவும் இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. பிற்படுத்தப்பட்ட மக்களும், சமுதாயத்தில் தாழ்ந்த நிலையில் இருக்கிறார்கள். பள்ளத்தில் இருக்கிறார்கள். அவர்களையும் கைதூக்கி விடவேண்டும், இல்லையென்றால் கல்வி வாய்ப்பிலும், வேலை வாய்ப்பிலும் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லாமலேயே போய்விடும் என்ற நிலையில், அவர்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று நீண்ட பல ஆண்டுகளாகவே கோரிக்கைகள் விடப்பட்டு வந்தன.

இந்த நிலையில், பி.பி.மண்டல் தலைமையிலான இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. மண்டல் ஆணையம் மிக விரிவாக ஆய்வு செய்து, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்துக்கு, மத்திய அரசாங்க பணியிடங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கலாம் என்று பரிந்துரை செய்தது.

பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் 50 சதவீதத்துக்கு மேல் இருந்தும், இவ்வளவாவது கிடைக்கிறதே என்று மகிழ்ச்சி அடைந்த வேளையில், அதை நிறைவேற்ற பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அதனால், மத்திய அரசாங்கம் அதை நிறைவேற்ற முன்வரவில்லை. இந்த நிலையில், 1989-ம் ஆண்டு தேசிய முன்னணி அமைக்கப்பட்டு, மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு, வி.பி.சிங் இந்தியாவின் 7-வது பிரதமராக பொறுப்பேற்றார். அந்த கால கட்டம்தான் இந்தியாவுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் பொற்காலமாக அமைந்தது. அவர் பிரதமராக இருந்தது 11 மாதங்கள்தான் என்றாலும், அவர் ஆற்றிய சாதனைகள் காலத்தால் மறக்க முடியாதவையாகும். பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற உத்தரவை அமல்படுத்தினார். தமிழக மக்களின் உயிர் பிரச்சினையான காவிரி பிரச்சினைக்கு ஒரு தீர்வுகாண காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. சென்னை கடற்கரையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் வேண்டுகோளையேற்று, சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்துக்கு பேரறிஞர் அண்ணா பெயரையும் சூட்டியவர் வி.பி.சிங். டாக்டர் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கியதும், நாடாளுமன்றத்தில் அவருடைய படத்தை வைத்து பெருமைசேர்த்ததும் அவரே. இவ்வாறு இந்திய மக்களின் மனதில் நெஞ்சற கலந்தவரும், தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவருமான வி.பி.சிங்குக்கு இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் சிலை அமைப்பது அவரது நீங்கா புகழுக்கு அடையாளமாகும்.

Tags:    

மேலும் செய்திகள்