பணி நியமனங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை

தமிழ்நாட்டில் அங்கிங்கெனாதபடி எங்கு பார்த்தாலும் வட மாநில இளைஞர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருப்பதைப் பார்க்க முடிகிறது.

Update: 2023-01-06 19:52 GMT

தமிழ்நாட்டில் அங்கிங்கெனாதபடி எங்கு பார்த்தாலும் வட மாநில இளைஞர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆரம்பத்தில் கட்டிட வேலை, மொசைக் பதிக்கும் வேலை, டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு மட்டும் வந்த இந்த வட மாநில இளைஞர்கள் இப்போது பார்க்காத வேலையே இல்லை. எல்லா வேலைகளிலும் கால் பதித்துவிட்டார்கள். உடல் உழைப்பு வேலைகளில்தான் வட மாநில இளைஞர்களின் ஆதிக்கம் இருக்கிறது என்றால், படித்துவிட்டு மத்திய அரசாங்க பணிகளுக்கு செல்லும், குறிப்பாக தமிழ்நாட்டில் வேலைபார்க்கும் வாய்ப்புகள் கூட நமது இளைஞர்களுக்கு உரிய முறையில் கிடைப்பதில்லை.

ரெயில்வே என்றாலும் சரி, தபால் இலாகா என்றாலும் சரி, வங்கி பணிகள் என்றாலும் சரி மற்றும் எந்த வகையான மத்திய அரசாங்க பணிகள், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் என்றாலும் சரி பெரும்பாலான இடங்களில் வட மாநில இளைஞர்கள்தான் அந்த வேலை வாய்ப்பைப் பெற்று உட்கார்ந்து இருக்கிறார்கள். குறிப்பாக ரெயில்வேயில் எந்த பணிகள் என்றாலும், தமிழக இளைஞர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இந்த பிரச்சினைக்கு ஒரு சரியான தீர்வு காணும் முயற்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இறங்கியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். மத்திய அரசாங்கம் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். 2021-2022-ம் ஆண்டுக்கான பணியாளர் தேர்வாணையத்தின் ஆண்டறிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 28,081 பேரில் 4.5 சதவீதம் பேர்தான் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது மட்டுமல்லாமல் தெற்கு ரெயில்வேயில் சரக்கு ரெயில் கார்டு, இளநிலை கணக்கு உதவியாளர் மற்றும் தட்டச்சர், சீனியர் எழுத்தர் மற்றும் தட்டச்சர், சீனியர் வர்த்தக மற்றும் டிக்கெட் கிளார்க், ஸ்டேஷன் மாஸ்டர் போன்ற பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அல்ல. இது வேலை இல்லா திண்டாட்டத்தால் வாடும் தமிழக இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த குறையை சரிசெய்ய அனைத்து மத்திய அரசாங்க தேர்வுகளையும் தமிழிலும் நடத்தவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள ரெயில்வே நிறுவனங்களில் பயிற்சி பெறுவோருக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் நேரடி நியமனங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு பிராந்திய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யவேண்டும். இவ்வாறு பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம் வேலை தேடிக்கொண்டு இருக்கும் இளைய சமுதாயத்துக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த கடிதம் அவர்கள் உள்ளங்களில் புதிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்மொழி மீது அதிக அன்பு கொண்டவரும், தமிழ் தொன்மையான மொழி என்று பறை சாற்றுபவரும், இந்தியாவிலும் சரி உலகில் எங்கு சென்று பேசினாலும் சரி, தமிழ் படைப்புகளை மேற்கோள் காட்டுபவரும், வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நடத்த காரணமாக இருந்தவருமான பிரதமர் நரேந்திர மோடி தமிழக இளைஞர்களின் மனக்குமுறலை போக்கும் வண்ணம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த கோரிக்கையை நிறைவேற்றவேண்டும் என்பதே தமிழகத்தின் வேண்டுகோளாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்