நேருவின் குடும்பத்துக்கு 'கை' கொடுக்கும் தென் மாநிலங்கள் !

நேருவுக்கு வலதுகரமாக இருந்து, முக்கியமான நேரங்களில் துணை நின்றது தமிழகத்தை சேர்ந்த பெருந்தலைவர் காமராஜர்தான்

Update: 2024-10-25 00:47 GMT

சென்னை,

மறைந்த பிரதமர் நேரு மற்றும் அவரது வாரிசுகள் வடக்கே பிறந்திருந்தாலும், அவர்கள் அரசியல் வாழ்வுக்கு அவசியமான நேரங்களில் கை கொடுத்தது தென் மாநிலங்கள்தான். நேருவுக்கு வலதுகரமாக இருந்து, முக்கியமான நேரங்களில் துணை நின்றது தமிழகத்தை சேர்ந்த பெருந்தலைவர் காமராஜர்தான். நேருவின் மறைவுக்கு பிறகு அடுத்த பிரதமர் யார்? என்று இந்தியாவே எதிர்பார்த்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் பெரிய தலைவர்களெல்லாம் மொரார்ஜி தேசாயை மனதில் வைத்து காயை நகர்த்தினர். அப்போது, பெருந்தலைவர் காமராஜர், இந்திராகாந்திதான் அடுத்த பிரதமர் என்ற நிலைப்பாட்டை எடுத்தார். அவர் எடுத்த முயற்சியின் பலனாக இந்திராகாந்தியால் பிரதமராக முடிந்தது.

தொடர்ந்து அவரது வாரிசுகள் காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள் என்றால், அதற்கு காமராஜர் விதைத்த வித்துதான் காரணம். அதுபோல, நெருக்கடிநிலை முடிந்தபிறகு 1977-ல் நடந்த மக்களவை தேர்தலில் வடமாநிலங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை அடைந்தது. ஆனால், தமிழ்நாட்டில் காங்கிரஸ்-அ.தி.மு.க. கூட்டணி பெரும் வெற்றியை பெற்றது. அந்த தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலியில் போட்டியிட்ட இந்திராகாந்தி படுதோல்வி அடைந்தார். உலகம் முழுவதும் இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் 1978-ம் ஆண்டு நவம்பர் மாதம் கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூர் தொகுதியில் போட்டியிட்ட இந்திராகாந்தி 77 ஆயிரத்து 333 வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பெற்றார். இந்தத் தேர்தல் அவருக்கு அரசியலில் மறுபிறவியை தந்தது. அந்த நேரத்தில், முதலில் அவர் தஞ்சாவூர் இடைத்தேர்தலில்தான் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், சில காரணத்தால் அவரால் தமிழ்நாட்டில் போட்டியிட முடியவில்லை. சிக்மகளூர் தொகுதியில் உள்ள தமிழர்களிடம் இந்திராகாந்திக்காக அ.தி.மு.க.வை சேர்ந்த முசிறிப்புத்தன் அங்கேயே தங்கியிருந்து வாக்கு சேகரித்தார். சிறப்பாக தேர்தல் பணியாற்றியதற்காக அவரை இந்திராகாந்தி வெகுவாக பாராட்டினார். தொடர்ந்து கலைஞர் கருணாநிதியும் இப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் அரசியலில் நேரு குடும்பத்தினருக்கு பெரும் பலமாக இருந்து வருகிறார்கள்.

ராஜீவ்காந்தியின் மறைவுக்கு பிறகு சோனியாகாந்தி கர்நாடக மாநிலம் பெல்லாரியிலும், ரேபரேலியிலும் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் வென்று சாதனை படைத்தார். அடுத்து ராகுல்காந்தி 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி, கேரளாவில் உள்ள வயநாடு ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிட்டாலும் அமேதியில் தோல்வியடைந்து, வயநாட்டில் வெற்றி பெற்று அரசியல் வாழ்வில் வெற்றிகரமாக வலம் வந்தார். மீண்டும் இந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ரேபரேலியிலும், வயநாட்டிலும் போட்டியிட்டு 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.

ஒரு தொகுதியில்தான் உறுப்பினராக இருக்கமுடியும் என்ற வகையில், வயநாடு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இப்போது அங்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. அதில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல்காந்தியின் தங்கை பிரியங்கா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அப்போது சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் உடன் இருந்தனர். பிரியங்கா இதுவரையில் தேர்தலில் போட்டியிட்டதில்லை. கட்சி பணிகளை ஆற்றிவந்த அவருக்கு வயநாடுதான் அவரது அரசியல் வாழ்வின் நுழைவு வாயிலாக அமைந்துள்ளது. ஆக, நேரு குடும்பத்தில் அவருக்கும் சரி, அவரது வாரிசுகளுக்கும் சரி தென் மாநிலங்கள்தான் ஏணிப்படிகளாக இருந்து உயர்வுக்கு கைதூக்கிவிட்டிருக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்