புதிய வேலைவாய்ப்புகள் வேண்டும்

ஒரு நாட்டின் வளர்ச்சியே அங்கு புதிது புதிதாக உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளில்தான் இருக்கிறது.

Update: 2023-02-12 19:46 GMT

ஒரு நாட்டின் வளர்ச்சியே அங்கு புதிது புதிதாக உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளில்தான் இருக்கிறது. அந்த வகையில் வேலைவாய்ப்புகளை அதிகளவில் உருவாக்கவேண்டிய கட்டாயம் இப்போது இருக்கிறது. ஏனெனில் உலகளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்ற அச்சத்தில் அமேசான், கூகுள் போன்ற பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏராளமாக ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த இளைஞர்களெல்லாம் இந்தியாவில் இனி புதிதாக வேலை தேடுவார்கள். அவர்களுக்கும் வேலை கிடைக்க வேண்டும்.

கடந்த சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 18 மாதங்களில் மத்திய அரசாங்கம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து 'ரோஜ்கர் மேளா' அதாவது வேலைவாய்ப்பு திருவிழா என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் 22-ந்தேதி தொடங்கி வைத்தார். அப்போது நாடு முழுவதும் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன உத்தரவுகள் மத்திய மந்திரிகளால் வழங்கப்பட்டன. தொடர்ந்து நவம்பர் 22-ந்தேதி மேலும் 71 ஆயிரம் பேருக்கு பிரதமரும், மத்திய மந்திரிகளும் நாடு முழுவதும் மத்திய அரசாங்கத்தின் பல்வேறு துறைகள், வங்கிகளில் பணிபுரிவதற்கான ஆணைகளை வழங்கினர். மேலும், 3-வது கட்டமாக கடந்த மாதம் 20-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் 71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசாங்கத்தின் இளநிலை என்ஜினீயர்கள், லோகோ பைலட்டுகள், தொழில்நுட்ப வல்லுனர்கள், ஆய்வாளர், துணை ஆய்வாளர்கள், காவலர், சுருக்கெழுத்தாளர், இளநிலை கணக்காளர், கிராமப்புற தபால் ஊழியர், வருமான வரி ஆய்வாளர், ஆசிரியர், டாக்டர்கள், நர்சுகள், சமூக பாதுகாப்பு அலுவலர், தனி செயலர், பல்துறை அலுவலர் மற்றும் பல்வேறு பணிகளில் சேருவதற்கான ஆணைகளை காணொலி காட்சி மூலம் வழங்கினார்.

தமிழ்நாட்டிலும் 4 இடங்களில் இந்த வேலைவாய்ப்பு திருவிழா நடந்தது. மத்திய மந்திரிகள் இந்த விழாக்களில் பங்கேற்றனர். புதிதாக வேலைவாய்ப்பு ஆணைகளை பெற்றுக்கொண்ட சிலருடன் பிரதமர் கலந்துரையாடினார். இந்த திருவிழா மூலம் புதிதாக மத்திய அரசாங்க பணிகளில் சேருபவர்களுக்கு கர்மயோகி பிராரம்ப் என்ற ஆன்-லைன் மூலமான ஒருங்கிணைப்பு வகுப்புகள் நடைபெற இருக்கின்றன.

கடந்த 8 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு வசதிகளில் செய்த முதலீடுகள் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. புதிதாக ஒரு சாலையோர ரெயில்வே லைனோ போடப்பட்டால், அந்த வழியில் எப்படி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பல வர்த்தக நிறுவனங்கள், தொழில்கள் உருவாகும், சுய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்பதை விரிவாக விளக்கி கூறினார். இதுமட்டுமல்லாமல் 'இத்தகைய வேலைவாய்ப்பு திருவிழாக்கள் தொடர்ந்து நடக்கும், இதுதான் தன் அரசாங்கத்தின் அடையாளமாக இருக்கும்' என்று கூறினார். இப்போது மத்திய அரசாங்கத்தில் 9 லட்சத்து 79 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கின்றன. இதில் ரெயில்வேயில் மட்டும் 2 லட்சத்து 93 ஆயிரம் பணியிடங்கள் இருக்கின்றன. இந்த காலியிடங்கள் அனைத்தையும் உடனடியாக படிப்படியாக நிரப்ப வேண்டும். 10 லட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கில் காலியாக உள்ள பணியிடங்களையும் நிரப்பி மேலும் ஏராளமான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது வேலை தேடி காத்திருக்கும் இளைஞர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்