அன்பு ததும்பும் கருணை முகம்!

அயோத்தியில் நேற்று முன்தினம் 500 ஆண்டு பிரச்சினைக்கு, 84 வினாடிகளில் தீர்வுகாணும் வகையில், பால ராமர் கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

Update: 2024-01-23 20:01 GMT

அயோத்தியில் நேற்று முன்தினம் 500 ஆண்டு பிரச்சினைக்கு, 84 வினாடிகளில் தீர்வுகாணும் வகையில், பால ராமர் கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 1528-ம் ஆண்டு முதல் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்ற முயற்சி தொடங்கியது. நீண்ட சட்டப்போராட்டம் நடந்தது. இந்த சர்ச்சைக்கு ஒரு முடிவு காணும் வகையில், 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 6-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய ஒரு தீர்ப்பு இதற்கு ஒரு வழியை காட்டியது. சர்ச்சைக்குரிய அந்த இடத்தில், ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என்று வழங்கிய தீர்ப்பு வரலாற்றில் முக்கியமானதாக கருதப்பட்டது. அதே நேரத்தில், மசூதி கட்டிக்கொள்ளவும் 5 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச அரசாங்கம் வழங்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.

2019-ம் ஆண்டு பா.ஜனதா தேர்தல் அறிக்கையிலும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. 2020-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந்தேதி ராமர் கோவில் கட்டுவதற்கு அறக்கட்டளை அமைக்கப்படும் என்று மக்களவையில் பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்புப்படி அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி ராமர் கோவில் கட்டுவதற்காக வெள்ளி செங்கல் வைத்து அவர் அடிக்கல் நாட்டினார். பாரம்பரிய நாகரா கட்டிட கலையில் கட்டப்பட்டுவரும் இந்த கோவிலில், நேற்று முன்தினம் பால ராமருக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இவ்வளவு நாளும் அயோத்தியில் கட்டப்பட்டுவரும் ராமர் கோவில் பற்றித்தான் உலகுக்கு தெரிந்ததே தவிர, அங்கு அருள்பாலிக்கும் மூலவரான பால ராமர் பற்றி யாருக்கும் தெரியாது. பால ராமர் எப்படி இருப்பார்? என்பது பரம ரகசியமாகவே இருந்தது. கோவில் கருவறையில் காட்சியளிக்கும் பால ராமர் சிலையை, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த, 5 தலைமுறைகளாக சிற்பக்கலையில் ஈடுபட்டுவரும் குடும்பத்தை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடிவமைத்தார். 41 வயதான அவர் வர்த்தக நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர் ஆவார். "இந்த சிலையை வடிவமைத்த நான் உலகிலேயே அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்" என்று உணர்ச்சி பொங்க சொல்கிறார்.

இந்த சிலை செய்வதற்காக மைசூரு மாவட்டத்தில் உள்ள, குஜ்ஜேகவுடனபுரம் என்ற இடத்தில் இருந்து பாறை வெட்டி எடுக்கப்பட்டது. இந்த பாறை வானத்தைப்போல் நீலநிறம் கொண்டது. இது 300 கோடி ஆண்டுகள் பழமையானது என்று புவி அறிவியல்துறை நிபுணர்கள் கூறுகிறார்கள். நேற்று முன்தினம் நண்பகலில் 84 வினாடிகள் நீடித்த அபிஜித் முகூர்த்த நேரத்தில், பிரதமர் நரேந்திரமோடி பால ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தவுடன், பக்தர்களுக்கு காட்சியளித்தார். பார்க்க.. பார்க்க.. பரவசமளிக்கும் முகமாக, பார்த்துக்கொண்டேயிருக்க வைக்கும் முகமாக, பால ராமர் காட்சி அளித்துக்கொண்டு அருள்பாலிக்கிறார். பால ராமர் முகம் அன்பு ததும்பும் புன்சிரிப்புடன் பார்க்கும் முகமாக இருக்கிறது. அவருடைய கண்களில் கருணை தெரிகிறது. அவர் அதர்மத்தை அழிப்பார் என்பது அவர் கையில் உள்ள அம்பை பார்த்தால் தெரிகிறது. அயோத்தியில் பிறந்த இடத்தில்தான் அவர் 5 வயது வரை வாழ்ந்தார் என்றவகையில், பால ராமராக காட்சி அளிக்கிறார். அயோத்தியில் உள்ள பால ராமர், பக்தர்களின் மனதைவிட்டு நீங்கா ராமராக இருப்பார்.

Tags:    

மேலும் செய்திகள்