'எல் நினோ' வரப்போகிறதா?

ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூடி, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி, அதாவது ‘ரெப்போ ரேட்’ உயர்வு அல்லது குறைப்பு போன்ற பல முடிவுகளை எடுக்கிறது.

Update: 2023-02-23 20:07 GMT

ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூடி, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி, அதாவது 'ரெப்போ ரேட்' உயர்வு அல்லது குறைப்பு போன்ற பல முடிவுகளை எடுக்கிறது. கடந்த ஆண்டு மே மாதம் 4 சதவீதமாக இருந்த 'ரெப்போ ரேட்', 6 முறை உயர்த்தப்பட்டு இப்போது 6.5 சதவீதமாக அதிகரித்துவிட்டது. வங்கிகளுக்கான வட்டி விகிதத்தைத்தானே ரிசர்வ் வங்கி உயர்த்துகிறது, நமக்கு என்ன கவலை என்று மக்கள் நினைத்துவிட முடியாது. ஏனெனில், வங்கிகள் தாங்கள் செலுத்தும் அதிக வட்டி சுமையை மக்கள் மீதுதான் சுமத்தும்.

வங்கிகளிலிருந்து பொதுமக்கள் வாங்கும் வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன், சிறுதொழில் கடன் என்று அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதமும் உயர்த்தப்படும், இல்லையென்றால் தவணைக்காலம் உயரும். இந்த 'ரெப்போ ரேட்' உயர்வுக்கு ரிசர்வ் வங்கி கூறும் ஒரே காரணம், பணவீக்கம் உயர்ந்து கொண்டிருக்கிறது. அதைக்கட்டுப்படுத்துவதற்கு இதுதான் ஒரே வழி என்கிறது. பணவீக்கம் என்பது விலைவாசி உயர்வை வைத்துத்தான் கணக்கிடப்படுகிறது. உணவு பொருட்கள், எரிபொருட்கள் விலை உயர்வும், இது அல்லாத மற்ற செலவுகளின் உயர்வையும் வைத்துத்தான் 'ரெப்போ ரேட்' முடிவுகள் எடுக்கப்படுகிறது.

ஜனவரி மாத புள்ளி விவரப்படி, சில்லரை பொருட்களின் விலை உயர்வு 6.5 சதவீதமாக இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் கணக்குப்படி, இது 2 சதவீதத்திலிருந்து 6 சதவீதம் வரை இருக்கலாம், அதிலும் குறிப்பாக 4 சதவீதமாக இருந்தால் நல்லது என்று நிர்ணயித்துள்ளது. இப்போது உணவு தானியத்தின் விலை அதிகமாக இருப்பதால்தான், உணவு பொருட்களின் பணவீக்கம் அதிகமாக இருக்கிறது. உணவு தானிய விளைச்சலில் பருவம் தவறிய மழையால், இப்போது உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அச்சுறுத்தும் வகையில், அமெரிக்க அரசாங்கத்தின் வானிலை ஆய்வு நிறுவனமான தேசிய கடல் மற்றும் சூழ்நிலை நிர்வாகம், 'எல் நினோ' உருவாகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், இந்தியாவில் பருவமழை பொய்த்துவிடும் அபாயம் இருக்கிறது என்று எச்சரித்துள்ளது.

ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை, அதாவது தென்மேற்கு பருவமழையை பாதிக்கும் அளவில், இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளது. 'எல் நினோ' என்றால், தென் அமெரிக்காவுக்கு மேற்கே பசிபிக் கடல் மட்டத்தின் வெப்பம் பொதுவாக 60 முதல் 70 டிகிரி பாரன்ஹீட்டாகத்தான் இருக்கும். இது 80 டிகிரி அல்லது அதற்கும் மேலாகும்போது, அந்தப் பகுதியில் கடுமையான வானிலை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றம்தான் 'எல் நினோ'. அதுதான் வரும் என்று அமெரிக்க வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, அமெரிக்காவின் மேற்கு பகுதியில் இடியுடன் கூடிய மழை கொட்டித்தீர்க்கும். அதே சமயம், இந்தியா, ஆஸ்திரேலியாவில் பருவமழை பொய்த்து கடும் வறட்சி ஏற்படும். 'எல் நினோ' ஏற்பட்டால், பயிர்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக பணவீக்கம், அதாவது விலைவாசி உயர்வு ஏற்படும், 'ரெப்போ ரேட்' விகிதம் இன்னும் உயரும் அபாயமும் இருக்கிறது. எனவே, இதையெல்லாம் சமாளிக்க மத்திய அரசாங்கம் உடனடியாக அமெரிக்க அரசாங்கத்துடன் பேசி, 'எல் நினோ' தொடர்பான தகவல்களைத் திரட்டி, மாநில அரசுகளை உஷார் படுத்தவேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்