சரக்கு சேவை வரி வசூல் உயர்ந்து இருக்கிறது; பிறகு ஏன் வரி உயர்வு?

உழைத்து சம்பாதிக்கும் வருமானத்துக்கு முறையாக வருமான வரி, தொழில் வரி கட்டிவிட்டு, மீதமுள்ள தொகையை, “சிக்கனமா வாழணும், சேர்த்து வைக்க பழகணும்” என்ற தத்துவத்தின்படி, வாயைக்கட்டி, வயிற்றைக் கட்டி சேமித்து வைத்த பணத்தை சேமிப்புகளில் சேர்த்து வைத்தால், அதற்கு கிடைக்கும் வட்டிக்கும் வருமான வரி.

Update: 2022-07-18 19:53 GMT

பொதுவாகவே மக்களுக்கு ஒரு மனக்குறை உண்டு. உழைத்து சம்பாதிக்கும் வருமானத்துக்கு முறையாக வருமான வரி, தொழில் வரி கட்டிவிட்டு, மீதமுள்ள தொகையை, "சிக்கனமா வாழணும், சேர்த்து வைக்க பழகணும்" என்ற தத்துவத்தின்படி, வாயைக்கட்டி, வயிற்றைக் கட்டி சேமித்து வைத்த பணத்தை சேமிப்புகளில் சேர்த்து வைத்தால், அதற்கு கிடைக்கும் வட்டிக்கும் வருமான வரி. சரி அதையும் கட்டிவிட்டு மீதமுள்ள பணத்தை வைத்து ஏதாவது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கினால் அதற்கும் சரக்கு சேவை வரி.

இப்படி எந்தப்பக்கம் திரும்பினாலும் வரித் தாக்குதலையே சந்திக்கும் மக்களுக்கு, இப்போது சண்டிகாரில் நடந்த 47-வது சரக்கு சேவை வரி, அதாவது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், வீட்டு உபயோக பொருட்கள், விவசாயத்துக்கு தேவையான பொருட்கள் என்று பல பொருட்களுக்கு வரியை உயர்த்தியிருப்பது பெரிய அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்துள்ளது.

எல்.இ.டி. விளக்குகள், மின்விளக்குகளுக்கு தேவையான உதிரி பாகங்கள், அச்சு மை, பேனா, மை, கத்தி, பிளேடு போன்ற பொருட்களுக்கு இப்போது விதிக்கப்படும் வரி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக நேற்று (18-ந் தேதி) முதல் உயர்த்தப்பட்டுவிட்டது. மேலும், இல்லத்தரசிகள் பயன்படுத்தும் கிரைண்டர்களுக்கு ஏற்கனவே 5 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டி. 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுவிட்டது. வணிக பெயர் அல்லாத பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அரிசி, பருப்பு, பொரி போன்ற உணவு பொருட்களுக்கு 5 சதவீத வரியும், சூரிய சக்தியால் இயங்கும் வாட்டர் ஹீட்டர், பதப்படுத்தப்பட்ட தோல் மற்றும் காலணிகளுக்கு 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகவும் வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட இந்த நேரத்தில், உணவு பொருட்களை விற்பதற்கு பயன்படுத்தும் "டெட்ரா பேக்" மீதான வரி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயம், வீடுகளுக்கு என முக்கிய தேவையான மோட்டார் பம்புசெட்டுகள் மீதான வரியும் 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. காசோலை புத்தகத்தையும் விட்டு வைக்கவில்லை, அதற்கும் 18 சதவீத வரி. ரூ.1000-த்துக்கு குறைவான நாள் வாடகை உள்ள ஓட்டல் அறைகளுக்கு வரி விலக்கு இருந்த நிலையில், இப்போது புதிதாக 12 சதவீதம் வரி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது மருத்துவ சேவைக்காக ஓட்டல்களில் ரூ.500 வாடகையில் தங்குபவர்கள், நேர்முக போட்டித் தேர்வுக்காக வெளியூர் செல்லும் மாணவர்கள் ஓட்டலில் தங்கினால் அவர்களுக்கும் வரி. இப்படி மொத்தம் 24 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரியை ஜி.எஸ்.டி. கவுன்சில் உயர்த்தியுள்ளது. இதனால், அரிசி, கோதுமை உள்பட அனைத்து பொருட்களின் விலையும் மக்களுக்கு வலிக்கும் வகையில் உயர்ந்துவிட்டது.

சாதாரண மக்களை பாதிக்கும் வகையில் செய்யப்பட்ட இந்த வரி உயர்வுக்கு ஜி.எஸ்.டி. கவுன்சிலில் கலந்துகொண்ட ஒரு மாநில நிதி மந்திரிகூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது மக்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது.

"ஒரே நாடு; ஒரே வரி" என்ற நோக்குடன் சரக்கு சேவை வரியைக் கொண்டு வந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. வரி வருவாய் உயர்ந்து கொண்டே போகிறது. கடந்த ஜூன் மாதம் சரக்கு சேவை வரி வசூல் ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 616 கோடியாக சாதனை படைத்துள்ளது. சரக்கு சேவை வரி வரலாற்றில் கடந்த ஏப்ரல் மாதம்தான் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் கோடி கிடைத்தது. அதற்கு அடுத்த வசூல் ஜூன் மாத வசூல்தான். வரி வசூல் அதிகமாகிக் கொண்டிருக்கும் நேரத்தில், ஏற்கனவே இருக்கும் வரி விகிதத்தைக் குறைக்கவேண்டுமே தவிர, மேலும்.. மேலும்.. உயர்த்தினால், எங்களால் தாங்க முடியாது என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்