தமிழ்நாட்டை தேடி ஓடிவரும் வெளிநாட்டு முதலீடுகள்!

ஒரு மாநிலம் வளம் பெற வேண்டுமானால், அங்கு தொழில் வளர்ச்சி மேம்பாடு அடைய வேண்டும்.

Update: 2023-01-18 19:55 GMT

ஒரு மாநிலம் வளம் பெற வேண்டுமானால், அங்கு தொழில் வளர்ச்சி மேம்பாடு அடைய வேண்டும். தொழில் வளர்ச்சி அதிகமாக இருந்தால்தான் வேலைவாய்ப்பு பெருகும். தொழிற்சாலை அமையும் இடங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் பெருகும். அந்த தொழிற்சாலையை சுற்றிலும் வணிக நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வர்த்தகம் தழைக்கும். தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களாலும், வர்த்தகங்களாலும் அரசுக்கும் வருமானம் கிடைக்கும். அதனால்தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் தொழில் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

"இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன்கண் விடல்" என்ற அய்யன் திருவள்ளுவரின் குறளுக்கேற்ப தொழில்துறை அமைச்சராக தங்கம் தென்னரசுவையும், அந்த துறை செயலாளராக கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கிருஷ்ணனையும் நியமித்தார். இந்த இருவர் அணி புதிய முதலீடுகளை தமிழ்நாட்டில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஈர்க்க தொழில் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பெரிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். துபாய் நாட்டுக்கு நேரடியாக சென்று தொழில் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட வைக்க செய்தார்.

அவருடைய உத்தரவின் பேரில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசும், செயலாளர் எஸ்.கிருஷ்ணனும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜப்பான் நாட்டுக்கு சென்று அங்குள்ள முன்னணி தொழில் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சு வார்த்தையின் பலனாக, புகழ்பெற்ற மிட்சுபிஷி நிறுவனம் தமிழ்நாட்டில் தொழிற்சாலை தொடங்க முன்வந்துள்ளது. ரூ.1800 கோடி முதலீட்டில் சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் தொடங்கப்பட இருக்கும் இந்த தொழிற்சாலை, 2 லட்சத்து 10 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், அறைகளுக்குள் பொருத்தப்படும் ஏர்கண்டிஷனர்கள் மற்றும் கம்ப்ரெஸ்சர்களை உற்பத்தி செய்யப்போகிறது.

நில ஆர்ஜிதம் மற்றும் கட்டுமான பணிகளுக்கான ஏற்பாடுகள் நிறைவடையும் தருவாயில் இருக்கின்றன. 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் உற்பத்தி தொடங்க இந்த நிறுவனத்தால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் இருந்து ஆண்டுக்கு 3 லட்சம் ஏர்கண்டிஷனர்களும், டிசம்பர் மாதத்தில் இருந்து ஆண்டுக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் கம்ப்ரெஸ்சர்களும் இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. இந்த தொழிற்சாலையில் பெரும்பாலான தொழிலாளர்கள் தமிழக தொழிலாளர்களாகவே, குறிப்பாக அந்த பகுதியில் உள்ளவர்களாகவே இருப்பார்கள் என்று அந்த நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனால், புதிய வேலைவாய்ப்புகளுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதுபோல, சாம்சங் நிறுவனமும், ரூ.1588 கோடி முதலீட்டில் சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் கம்ப்ரெஸ்சர் தொழிற்சாலையை தொடங்க இருக்கிறது. கடந்த 20 மாதங்களில் மட்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தீவிர முயற்சியால் 207 தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இதில் 111 தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு ரூ.13 ஆயிரத்து 726 கோடி முதலீடு கிடைத்துள்ளது. 15 ஆயிரத்து 529 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது. தொழில் வளர்ச்சியில் வேகமாக செல்லும் தமிழக அரசின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது என்பதுதான் இப்போதுள்ள மதிப்பீடு.

Tags:    

மேலும் செய்திகள்