தேர்தல் களத்தில் பெண் வேட்பாளர்கள்!

நடைபெறப்போகும் தேர்தலில் 77 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

Update: 2024-04-13 00:47 GMT

சென்னை,

பெண்களின் முன்னேற்றத்திற்கு தமிழ்நாட்டில் பண்டைய காலம் தொட்டே நமது முன்னோர்கள் மிகுந்த அக்கறை காட்டிவந்தார்கள். மகாகவி பாரதியார் கூட, "பெண்கள் விடுதலை கும்மி" என்ற பாட்டில், "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி!" என்று எழுதியிருக்கிறார்.

கல்வியிலும் சரி, வேலைவாய்ப்புகளிலும் சரி ஆண்களுக்கு இணையாக பெண்கள் வந்துவிட்டார்கள். ஆனால், சட்டங்கள் நிறைவேற்றப்படும் இடங்களான சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் மிக குறைவான எண்ணிக்கையிலேயே பெண்கள் இருக்கிறார்கள். மறைந்த முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி உள்ளாட்சி பதவிகளில் பெண்களுக்கு முதலில் மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்டத்தை நிறைவேற்றினார். அடுத்து ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது இதை 50 சதவீதமாக உயர்த்தி ஆணையிட்டு அதற்குரிய சட்டத்தையும் நிறைவேற்றினார். இதன் காரணமாக இப்போது மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளில் உள்ள பதவிகளில் 50 சதவீத இடங்களில் பெண்கள் பெருமையோடு மக்கள் பணியாற்றி வருகிறார்கள்.

உள்ளாட்சி அமைப்புகளில் மட்டுமல்லாமல், நாட்டை வழி நடத்துவதில் பெண்களுக்கு உரிய பங்கு வழங்கப்படவேண்டும். அதற்கு நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் உரிய பிரதிநிதித்துவம் இருந்தால்தான் பெண்கள் தங்கள் தலையெழுத்தை மாற்றுவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் முன்னேற்றத்துக்கும் சிறந்த சேவையாற்ற முடியும். இதற்காகத்தான் நீண்ட பல ஆண்டுகளாக கனவாக இருந்த பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா, கடந்த ஆண்டு நிறைவேறி ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டுவிட்டது. ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்து, அதன் அடிப்படையில் தொகுதி வரையறை முடிந்தவுடன்தான் இந்த சட்டம் செயலுக்கு வரும்.

என்றாலும், இப்போதே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்துவருவது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த மக்களவையில் 78 பெண் உறுப்பினர்கள் இருந்த நிலையில், இப்போது போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், 39 தொகுதிகளில் 2009-ம் ஆண்டு தேர்தலில் ஒரு பெண்தான் வெற்றி பெற்றிருந்தார். 2014 தேர்தலில் 55 பெண்கள் போட்டியிட்டு 4 அ.தி.மு.க. பெண் உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்ட பெண்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தாலும் கனிமொழி (தூத்துக்குடி), தமிழச்சி தங்கபாண்டியன் (தென்சென்னை) ஆகியோர் தி.மு.க. உறுப்பினர்களாகவும், ஜோதிமணி (கரூர்) காங்கிரஸ் உறுப்பினராகவும் 3 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இப்போது நடைபெறப்போகும் தேர்தலில் 77 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தி.மு.க. சார்பில் கனிமொழியும், தமிழச்சி தங்கபாண்டியனும், டாக்டர் ராணி ஸ்ரீகுமாரும், அ.தி.மு.க. சார்பில் ஜான்சி ராணியும், காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி, சுதா ஆகியோரும், பா.ஜனதா சார்பில் டாக்டர் தமிழிசை, ராதிகா சரத்குமார், பா.ம.க. சார்பில் சவுமியா அன்புமணி, திலகபாமா, ஜோதி வெங்கடேசன் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். நாம் தமிழர் கட்சியில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சரிபாதி என்ற தார்ப்பரியத்தில் 20 பெண் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள வேட்பாளர்கள் சுயேச்சைகள். ஆக, இப்போதுள்ள நிலையில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை மெதுவாக உயருகிறது என்றாலும் இடஒதுக்கீடு மசோதா அமலுக்கு வந்தவுடன் 33 சதவீத உறுப்பினர்கள் பெண்களாக இருப்பார்கள் என்ற வகையில், "ஒளி மயமான எதிர்காலம் தெரிகிறது" என்று பெண்கள் பூரிப்படையலாம்.

Tags:    

மேலும் செய்திகள்