தமிழக அரசை கலந்தாலோசிக்காமல் நிலக்கரி சுரங்க ஏலமா?

இந்தியா கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் இயங்கும் நாடாகும்.

Update: 2023-04-05 20:14 GMT

இந்தியா கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் இயங்கும் நாடாகும். இந்தநிலையில், பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமான காவிரி டெல்டா பகுதியிலும், கடலூர் மாவட்டத்திலும் நிலக்கரி சுரங்கங்கள் தோண்ட மத்திய அரசாங்கம் ஏல நடைமுறைகளை தொடங்கியிருப்பது அந்த பகுதி விவசாயிகளை மட்டுமல்லாமல் மாநில அரசாங்கத்தை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசாங்கம் முயற்சி எடுக்கிறதே என்ற கொந்தளிப்பு தமிழக மக்களிடமும் இருக்கிறது. பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலத்தில் விவசாயம்தான் நடக்கவேண்டும், அங்கு எந்தவித தொழிற்சாலைகளும், சுரங்கங்களும் அமைக்கக்கூடாது என்பது விதியாகும்.

இந்தநிலையில், மத்திய அரசாங்கத்தின் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஆணையம் இந்தியா முழுவதிலும் உள்ள 101 வட்டாரங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஏலம் விட அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே இருக்கும் பகுதி மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் வடசேரி ஆகிய பகுதிகளும் இடம் பெற்றிருக்கின்றன.

இந்த 3 பகுதிகளுமே காவிரி டெல்டா பகுதியில் உள்ள பொன் விளையும் பூமியாகும். விவசாயமே எங்கள் உயிர் என்று வாழும் வேளாண்குடி பெருமக்களும், அரசியல் கட்சிகளும் இந்த அறிவிப்பு கண்டு உறைந்துபோய்விட்டனர். ஆங்காங்கு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் நின்று தங்கள் எதிர்ப்பு குரலை எழுப்புகிறார்கள். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மின்னல் வேகத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலத்தில் எந்த ஒரு புதிய திட்டத்தையும் அல்லது புதிய செயல்பாட்டையும் எந்த ஒரு நபரும் மேற்கொள்ளக்கூடாது என்று மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, நிலக்கரி சுரங்கத்தை இந்த பகுதிகளில் மேற்கொள்ளவே முடியாது என்ற காரணத்தினால், இந்த 3 பகுதிகளையும் ஏல நடவடிக்கைகளில் இருந்து விலக்கிக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல் இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடும் முன்பு மத்திய அரசாங்கம் தமிழக அரசில் உள்ள தொடர்புடைய துறைகளுடன் கலந்தாலோசிக்கவேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த பிரச்சினை குறித்து சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தனியார் தீர்மானத்துக்கு பதிலளித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவருவார்கள் என்றார். அப்போது பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த காரணத்தைக்கொண்டும் அங்கு நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்காது. அளிக்காது. அளிக்காது என்று உரத்த குரலில் உறுதியாக கூறியது ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே மிக்க நம்பிக்கையை அளிக்கிறது. இந்த பிரச்சினை குறித்து டி.ஆர்.பாலு, மத்திய மந்திரியிடம் தொலைபேசியில் முறையிட்டிருக்கிறார். தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை மத்திய மந்திரியை நேரில் சந்தித்து வலியுறுத்தியிருக்கிறார்.

தமிழக அரசு என்று ஒன்று இருக்கிறது, அந்த மாநிலத்தில்தான் நிலக்கரி சுரங்கம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்போகிறோம், எனவே அந்த மாநிலத்துடன் கலந்தாலோசிக்கவேண்டும், அந்த பகுதி மக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தவேண்டும் என்பதையெல்லாம் மத்திய அரசாங்கம் கருத்தில்கொண்டு நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது. எனவே தமிழ்நாட்டில் எந்த திட்டத்தையும் மத்திய அரசாங்கம் செயல்படுத்த திட்டமிடும் முன்பு தமிழக அரசை கலந்தாலோசிக்கவேண்டும்; அதுதான் கூட்டாட்சி தத்துவத்துக்கு வலிமை சேர்க்கும்.

Tags:    

மேலும் செய்திகள்