உலகக்கோப்பை ஹாக்கி : 2 மைதானங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதியை அதிகரித்த ஒடிசா அரசு

ஹாக்கி உலகக் கோப்பை தொடர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது.

Update: 2022-09-23 07:21 GMT

Image Courtesy : HI/Twitter

2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 முதல் 29 வரையில் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் இரண்டு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெற உள்ளது. 16 நாடுகள் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தியா தொடரை நடத்தும் அணியாக பங்கேற்கிறது.

உலகக்கோப்பை ஹாக்கி போட்டியை முன்பை விட சிறப்பாகவும்,பெரிய அளவிலும் நடத்த ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளது.இந்த நிலையில் ஹாக்கி உலகக் கோப்பையை முன்னிட்டு , புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியம் மற்றும் ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா ஹாக்கி ஸ்டேடியத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நிதியை ஒடிசா அரசாங்கம் அதிகரித்துள்ளது.

முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான மாநில அமைச்சரவை இந்த முடிவை  எடுத்தது. இந்த திட்டத்துக்கான மதிப்பீடு ரூ.432.45 கோடியில் இருந்து ரூ.875.78 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தலைமைச் செயலாளர் எஸ்.சி.மஹாபத்ரா தெரிவித்தார். நவீன் பட்நாயக் தலைமையிலான மாநில அமைச்சரவை இந்த முடிவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிர்சா முண்டா ஹாக்கி ஸ்டேடியம் ரூர்கேலாவில் 20,000 பேர் அமரக்கூடிய வசதியுடன் கட்டப்பட்டு வருகிறது, இது இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி ஸ்டேடியமாக மாறும்.இதேபோல், புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியம் இந்தியாவின் முதல் உட்புற தடகள அரங்கம், உட்புற நீர்வாழ் மையம், டென்னிஸ் மைதானம், ஹாக்கிக்கான உயர் செயல்திறன் மையம், தங்குமிட வசதிகள் போன்ற பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.2018 ஆம் ஆண்டு உலக கோப்பை ஹாக்கி போட்டியை ஒடிசாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்