உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; வெற்றி வாய்ப்பு யாருக்கு...? - ஆஸி. முன்னாள் கேப்டன் கணிப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.

Update: 2023-06-06 08:57 GMT

மும்பை,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன. கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை நியூசிலாந்திடன் தவறவிட்ட இந்தியா இந்த முறை அந்த கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.

இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ச்ஜிப் இறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு உள்ளது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இரு அணிகள் குறித்து ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-

ஆஸ்திரேலியாவுக்கு சற்று அதிகமாக வாய்ப்பு உள்ளது. ஓவல் சூழ்நிலை இந்தியாவை விட ஆஸ்திரேலியாவுக்கு அதிக அளவில் பொருத்தமானதாக இருக்கும். இரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோற்றதைவிட அதிக அளவில் எதிர் அணிகளை வீழ்த்தியுள்ளன. இதனால் இரண்டு அணிகளும் முதல் இரண்டு இடத்திற்கும் தகுதியானவை.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் ஆஸ்திரேலியா சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை. அதேவேளையில் இந்திய வீரர்கள் உச்சக்கட்ட போட்டித்தன்மை வாய்ந்த ஐ.பி.எல். தொடரில் விளையாடியுள்ளனர். ஒரு அணி ப்ரெஷ் ஆக வருகிறது. மற்றொரு அணி சோர்வாக உள்ளது.

இதுபோன்ற பெரும்பாலான காரணிகள் போட்டியை பாதிக்கலாம். இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் சிறந்த போட்டிகளில் ஒன்று. இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இந்தியா 32 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா 44 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

இந்திய அணி ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய இரண்டு பேரையும் தேர்வு செய்ய வேண்டும். ஜடேஜா 6-வது இடத்தில் பேட்டிங் செய்யலாம். அவரது பேட்டிங் திறனை மேம்படுத்தியுள்ளதால், அவரை ஒரு பேட்ஸ்மேனாக கருதலாம். தேவைப்பட்டால் சில ஓவர்கள் வீச வைக்கலாம்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜாவை விட அஸ்வின் சிறந்தவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஜடேஜாவை அணியில் வைத்துக் கொண்டால், போட்டி நான்காவது அல்லது ஐந்தாவது நாள் செல்லும் நிலை ஏற்பட்டு, ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் நிலை ஏற்பட்டால், சிறந்த 2-வது சுழற்பந்து வீச்சு வாய்ப்பாக இருக்கும்.

இவ்வாறு ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்