உலக கோப்பை தகுதி சுற்று இறுதிப் போட்டி: இலங்கையின் சுழலில் சிக்கிய நெதர்லாந்து..105 ரன்னில் ஆல்-அவுட்...!
இலங்கை அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் மகேஷ் தீக்சனா 4, வனிந்து ஹசரங்கா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
ஹராரே,
13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 10 நாடுகள் பங்கேற்கின்றன. 8 நாடுகள் நேரடியாக தகுதி பெற்றன. 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது.
இலங்கை, நெதர்லாந்து அணிகள் முதல் 2 இடங்களை பிடித்து உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன. 2 முறை உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதல் முறையாக தகுதி பெறவில்லை. இதேபோல் ஜிம்பாப்வே அணியும் தகுதி பெறவில்லை.
இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று தொடரின் இறுதி ஆட்டத்தில் இலங்கை-நெதர்லாந்து அணிகள் இன்று ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய பதும் நிசாங்கா 23 ரன்னும், சதீரா சமரவிக்ரமா 19 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து களம் இறங்கிய குசல் மெண்டிஸ் 43 ரன், சஹான் ஆராச்சிகே 57 ரன்னும் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இதையடுத்து களம் இறங்கிய அசலங்கா 36 ரன், டி சில்வா 4 ரன், ஷனாகா 1 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இறுதியில் இலங்கை அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 233 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இலங்கை அணி தரப்பில் ஹான் ஆராச்சிகே 57 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி ஆடியது. நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடவுட் ஆகியோர் களம் இறங்கினர். இதில் விக்ரம்ஜித் சிங் 13 ரன்னில் அவுட் ஆனார்.
இதையடுத்து களம் இறங்கிய வெஸ்லி பாரேசி 0 ரன், தேஜா நிடமானுரு 0 ரன், நோவா குரோஸ் 7 ரன், ஸ்காட் எட்வர்ட்ஸ் 1 ரன், சாகிப் சுல்பிகர் 6 ரன் எடுத்து அவுட் ஆகினர். ஒரு முனையில் நிலைத்து நின்று ஆடிய மேக்ஸ் ஓ டவுட் 33 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதையடுத்து களம் புகுந்த ரியான் க்ளீன் 2 ரன், ஆர்யன் தத் 0 ரன், கிளேட்டன் பிலாய்ட் 9 ரன் எடுத்து அவுட் ஆகினர். மறுமுனையில் லோகன் வான் பீக் 20 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியில் நெதர்லாந்து அணி 23.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 105 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் இலங்கை அணி 128 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலகக்கோப்பை தகுதிசுற்றின் சாம்பியன் பட்டத்தை வென்றது. இலங்கை அணி தரப்பில் மகேசஹ் தீக்ஷனா 4 விக்கெட், தில்சன் மதுஷான்கா 3 விக்கெட், வனிந்து ஹசரங்கா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் உலகக்கோப்பைக்கு இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.