விராட் கடைசியாக எப்போது உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடினார்? - இர்பான் பதான் கேள்வி
இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.;
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி, அதன்பின் மீண்டு வந்து தொடரை 3-1 என்ற கணக்கில் (ஒரு போட்டி டிரா) கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும் சொந்த மண்ணில் கடந்த 2 பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்களில் கண்ட தோல்விக்கு தற்போது கம்மின்ஸ் தலைமையில் பதிலடி கொடுத்துள்ளது.
இந்த தொடரில் சீனியர் வீரர்களான விராட் மற்றும் ரோகித் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை. இதில் முதல் ஆட்டத்தில் மட்டும் சதம் அடித்த விராட் கோலி அடுத்த 4 போட்டிகளிலும் ஒரே முறையில் அவுட் ஆனார். இதனால் பல முன்னாள் வீரர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், விராட் கோலி கடைசியாக எப்போது உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடினார்? என இந்திய முன்னாள் வீரரான இர்பான் பதான் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
2024-ல் போட்டிக்கு அடித்தளம் இடக்கூடிய முதல் இன்னிங்ஸில் விராட் கோலி வெறும் 15 என்ற சராசரியை மட்டுமே கொண்டுள்ளார். அதுவே கடந்த ஐந்து வருடங்களில் அவர் 30ஐ கூட தாண்டவில்லை. இது போன்ற ஆட்டத்தை தான் சீனியர் வீரரிடம் இருந்து இந்திய அணி எதிர்பார்க்கிறதா?. அவருக்கு பதிலாக இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுங்கள். இளம் வீரர்கள் சுமாராக விளையாடினாலும் அவர்கள் வருங்காலத்திற்கு தயாராவார்கள்.
கடைசியாக விராட் கோலி உள்ளூரில் எப்போது விளையாடினார்?. (2012இல்). அவர் உள்ளூரில் விளையாடி ஒரு தசாப்தம் முடிந்து விட்டது. சச்சின் டெண்டுல்கர் கூட உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய பின்பு தான் ஓய்வு பெற்றார். இங்கே நாம் விராட் கோலியை அவமதிக்கவில்லை.
அவர் மிகவும் சிறப்பாக விளையாடி நிறைய ரன்கள் அடித்துள்ளார். ஆனால் தற்போது அவர் மீண்டும் மீண்டும் ஒரே தவறை செய்கிறார். இத்தனைக்கும் சுனில் கவாஸ்கர் அவருடைய தவறுகளை சுட்டிக்காட்டினார். ஆனாலும் அவர் அந்த தவறுகளை திருத்தம் செய்வதற்கு எந்த கடின முயற்சியும் செய்வதாக தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.