உலகக்கோப்பை கிரிக்கெட்; அரையிறுதி போட்டிகளுக்கான நடுவர்கள் யார்..? - வெளியான புதிய தகவல்...!
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
மும்பை,
இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மும்பையிலும், நாளை மறுநாள் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் கொல்கத்தாவிலும் மோத உள்ளன.
இந்நிலையில் அரையிறுதி போட்டிகளுக்கு, போட்டி நடுவர்கள் (மேட்ச் ரெப்ரீ) மற்றும் நடுவர்களாக (அம்பயர்) யாரெல்லாம் செயல்பட உள்ளார்கள் என்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதன்படி முதலாவது அரையிறுதி போட்டிக்கு ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் ராட் டக்கர் கள நடுவர்களாகவும், ஜோயல் வில்சன் 3வது நடுவராகவும், அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் 4வது நடுவராகவும், ஆண்டி பைகிராப்ட் போட்டி நடுவராகவும் (மேட்ச் ரெப்ரீ) செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல், 2வது அரையிறுதி போட்டிக்கு ரிச்சர்ட் கெட்டில்பரோ மற்றும் நிதின் மேனன் கள நடுவர்களாகவும், கிறிஸ் கேப்னி 3வது நடுவராகவும், மைக்கேல் கோப் 4வது நடுவராகவும், ஜவகல் ஸ்ரீநாத் போட்டி நடுவராகவும் (மேட்ச் ரெப்ரீ) செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.