உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று: யுஏஇ-யை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த ஓமன்...!
உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றது.;
புலவாயோ,
உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டி லீக் ஆட்டங்களில் ஆடி வருகின்றன. இந்த தொடரின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் தகுதிச்சுற்று தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் யுஏஇ - ஓமன் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய வாசிம் மற்றும் முஸ்தபா தலா 8 ரன்னில் அவுட் ஆகினர்.
இதையடுத்து களம் இறங்கிய அரவிந்த் 49 ரன், ரமீஸ் 38 ரன் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இவர்கள் அவுட்டான பின்னர் களம் இறங்கிய ஆசிப் கான் 27 ரன், பாசில் ஹமீது 8 ரன், அலி நசீர் 5 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இதையடுத்து ஆயன் அபல் கான் மற்றும் கார்த்திக் மெய்யப்பன் ஜோடி சேர்ந்தனர். இதில் மெய்யப்பன் 7 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் யுஏஇ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணி ஆடியது.
ஓமன் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய காஷ்யப் பிரஜாபதி 6 ரன், ஜதீந்தர் சிங் 2 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய அகிப் இல்யாஸ், சோயப் கான் ஆகியோர் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இருவரும் நிதானமாக ஆடி அரைசதம் அடித்தனர். இதில் அகிப் இல்யாஸ் 53 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து களம் புகுந்த ஜீஷன் மக்சூத் 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து முகமது நதீம் களம் இறங்கினார். இறுதியில் ஓமன் அணி 46 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 228 ரன்கள் எடுத்து வெற்றி தொடரில் தொடர்ச்சியாக தனது 2வது வெற்றியை பதிவு பெற்றது