உலகக்கோப்பை கிரிக்கெட்; நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து முதல் வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்...!

ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் முஜீப் உர் ரஹ்மான், ரஷீத் கான் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

Update: 2023-10-15 16:01 GMT

Image Courtesy: AFP

டெல்லி,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் டெல்லியில் மோதின. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 284 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆப்கானிஸ்தான் தரப்பில் குர்பாஸ் 80 ரன், இக்ராம் 58 ரன் எடுத்தனர். இதையடுத்து 285 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பேர்ஸ்டோ 2 ரன், மலான் 32 ரன், அடுத்து களம் இறங்கிய ரூட் 11 ரன், பட்லர் 9 ரன், லிவிங்ஸ்டன் 10 ரன், சாம் கரன் 10 ரன், வோக்ஸ் 9 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த புரூக் 66 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதனால் இங்கிலாந்து அணி 169 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து அடில் ரஷீத், மார்க் வுட் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 40.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 215 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து 69 ரன் வித்தியாசத்தில் நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்