பஸ்சை தவற விட்ட ஜெய்ஸ்வால்.. கோபமடைந்த ரோகித்.. நடந்தது என்ன..?

3-வது போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணியினர் நேற்று அடிலெய்டில் இருந்து புறப்பட்டனர்.;

Update:2024-12-12 11:59 IST

பிரிஸ்பேன்,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவும், அடிலெய்டில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ள நிலையில், தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி பிரிஸ்பேனில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணியினர் நேற்று அடிலெய்டில் இருந்து பிரிஸ்பேனுக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது அடிலெய்டில் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து பஸ் மூலம் விமான நிலையம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 10 மணியளவில் விமானம் புறப்படும் என்ற நிலையில் இந்திய வீரர்கள் அனைவரும் 8.30 மணிக்கே ஓட்டலில் இருந்து பஸ்சில் ஏறினர்.

ஆனால் தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜெய்ஸ்வால் மட்டும் தனது அறையை விட்டு வெளியேறவில்லை. சுமார் 20 நிமிடங்கள் அவருக்காக காத்திருந்தனர். அதிலும் அவர் வராததால் கோபமடைந்த ரோகித் சர்மா பாதுகாப்பு அலுவலரிடம் ஏதோ பேசி விட்டு பஸ்சில் ஏறினார். இதனையடுத்து ஜெய்ஸ்வாலை விட்டு விட்டு பஸ் அங்கிருந்து புறப்பட்டது.

பேருந்து சென்று ஒரு ஐந்து நிமிடத்திற்கு பிறகு ஓட்டலில் இருந்து வெளியே வந்த ஜெய்ஸ்வால் பஸ் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும் அவருக்காக ஏற்கனவே கார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அவர் விமான நிலையம் சென்றுள்ளார்.

ஜெய்ஸ்வாலின் செயல் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்