பும்ரா பந்துவீச்சை எதிர்கொள்ள சிறந்த வழி இதுதான் - மிட்செல் மார்ஷ்

பும்ரா பந்துவீச்சில் மெதுவாக விளையாடினால் அவுட்டாக வாய்ப்புள்ளதாக மார்ஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-12-12 09:28 GMT

அடிலெய்டு,

ஆஸ்திரேலியா - இந்தியா இடையே 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால் 2வது போட்டியில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது.

அதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்தியா அடுத்த 3 போட்டிகளிலும் கட்டாயம் வென்றாக வேண்டிய இக்கட்டான சூழலில் உள்ளது. அந்த சூழலில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி வரும் 14-ம் தேதி காபா மைதானத்தில் தொடங்க உள்ளது.

முன்னதாக இந்தத் தொடரில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா மிகவும் அபாரமாக பந்து வீசி ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்து வருகிறார். முதல் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற அவர், 2-வது போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டார்.

இந்நிலையில் உலகின் சிறந்த ஜஸ்பிரித் பும்ராவை எப்படியாவது சமாளித்து விடலாம் என்று மெதுவாக விளையாடினால் அவுட்டாக வாய்ப்புள்ளதாக மார்ஷ் தெரிவித்துள்ளார். எனவே தைரியமாக நின்று அட்டாக் செய்யும் பேட்டிங்கை வெளிப்படுத்துவதே பும்ராவை எதிர்கொள்ள சிறந்த வழி என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "உலகின் சிறந்த பவுலருக்கு எதிராக நீங்கள் விளையாடும் போது அவுட்டாகி விடுவோம் என்ற எண்ணத்தில் அவரை சமாளித்து நகர முயற்சிப்பீர்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரை அங்கே உங்களுக்கு நீங்களே அழுத்தத்தை கொடுத்து சொந்த வழியில் அவருக்கு எதிராக சவாலை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

தற்சமயத்தில் அவர் உலகின் மிகச்சிறந்த பவுலராக இருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். எனவே இவை அனைத்தும் அவருடைய சவாலுக்கு எதிராக நீங்கள் நிற்பது பற்றியதாகும். இது பெரிய தொடர். அத்தொடரில் உலகின் சிறந்த பவுலரான அவரை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய மனநிலை. அதனால் அவரை மீண்டும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.

என்னையும் அவுட்டாக்க அவர் வருவார். ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த திட்டங்களை வைத்திருப்பார்கள். சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் எனது வழியில் நான் பேட்டிங் செய்ய முயற்சிப்பேன். சில நேரங்களில் நீங்கள் நிதானமாகவும் சில நேரங்களில் அட்டாக் செய்யும் ஆட்டத்தையும் வெளிப்படுத்த வேண்டும். உலகின் சிறந்த இந்திய அணியின் பவுலிங் அட்டாக்கை எதிர்கொள்ள எங்களுடைய பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த வழியில் முயற்சி செய்வார்கள்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்