ரோகித் மிடில் ஆர்டரிலேயே தொடர்ந்து ஆட வேண்டும் - காரணத்துடன் விளக்கிய புஜாரா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது போட்டியில் ரோகித் மிடில் ஆர்டரில் களமிறங்கினார்.

Update: 2024-12-12 05:36 GMT

அடிலெய்டு,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது.

முன்னதாக முதல் போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக ரோகித் விலகிய நிலையில் கேப்டனாக செயல்பட்ட பும்ரா அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்திருந்தார். தற்போது ரோகித் தலைமையில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது.

கேப்டனாக மட்டுமின்றி பேட்டிங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தாத ரோகித் சர்மா மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் அந்த போட்டியில் தம்முடைய ஓப்பனிங் இடத்தை ராகுலுக்கு விட்டுக் கொடுத்த அவர் மிடில் ஆடரில் களமிறங்கி சுமாராக விளையாடினார். எனவே ரோகித் பார்முக்கு திரும்ப வேண்டுமெனில் மீண்டும் தொடக்க வீரராக விளையாட வேண்டும் என்று ரவி சாஸ்திரி, கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்கள் ஆலோசனை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்திய அணிக்காக தனது ஓப்பனிங் இடத்தை தியாகம் செய்து ரோகித் தொடர்ந்து மிடில் ஆர்டரில் விளையாடுவதே சரியான முடிவு என்று புஜாரா தெரிவித்துள்ளார். மேலும் கிளீன் போல்டாவதை தவிர்க்க ஸ்டம்ப் லைன் பந்துகளை சிறப்பாக எதிர்கொள்ளும் டெக்னிக்கில் ரோகித் பயிற்சி எடுக்க வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "நியூசிலாந்துக்கு எதிராக பெரிய ரன்கள் குவிக்காத ரோகித் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் நன்றாக தொடங்கவில்லை. எனவே அவர் கொஞ்சம் அழுத்தத்தில் இருக்கிறார். ஆனால் தன்னுடைய ஆட்டத்தை நன்றாக தெரிந்த ரோகித் சர்மா போன்றவர் நேர்மறையாக இருந்து தன்னுடைய புட் ஒர்க்கில் இன்னும் கொஞ்சம் வேலை செய்ய வேண்டும்.

அவருடைய கால் நகர்வு கொஞ்சம் பெரிதாக இருந்தால் அது அவருக்கு உதவும். மேலும் ஸ்டம்ப் லைன் அவருக்கு அதிகமான தொல்லையை கொடுக்கிறது. அதனாலேயே அவர் போல்டு அல்லது எல்பிடபுள்யூ முறையில் அதிகமாக அவுட்டாகிறார். எனவே அந்த லைனில் அவர் வலைப்பயிற்சியில் அதிகமாக வேலை செய்ய வேண்டும். ஏனெனில் அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் பந்துகளில் அவர் நன்றாக விளையாடுகிறார்.

அதே போல இந்திய அணியில் ராகுல், ஜெய்ஸ்வால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அவர் தொடர்ந்து 6வது இடத்தில் விளையாட வேண்டும். ஏனெனில் முதல் போட்டியில் அவர்கள் நன்றாக பேட்டிங் செய்தனர். சுப்மன் கில் 3-வது இடத்தில் விளையாடுவார். எனவே நீண்ட கால திட்டத்தை கருத்தில் கொண்டு ரோகித் தொடர்ந்து 6வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்