ஸ்டார்க்கை ஜெய்ஸ்வால் தேவையின்றி தட்டி எழுப்பிவிட்டார் - பாண்டிங் கருத்து

முதல் போட்டியில் ஸ்டார்க்கை ஜெய்ஸ்வால் தேவையின்றி தட்டி எழுப்பியதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

Update: 2024-12-12 08:34 GMT

அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது.

முன்னதாக அந்தத் தொடரின் முதல் போட்டியில் இளம் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 161 ரன்கள் குவித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் அனுபவ வீரர் மிட்செல் ஸ்டார்க்கை, 'நீங்கள் மிகவும் மெதுவாக பந்து வீசுகிறீர்கள்' என்று ஜெய்ஸ்வால் சீண்டினார்.

இதனையடுத்து நடைபெற்ற 2-வது போட்டியின் முதல் பந்திலேயே ஜெய்ஸ்வாலை கோல்டன் டக் அவுட்டாக்கிய ஸ்டார்க் தக்க பதிலடி கொடுத்தார். மேலும் 8 விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

இந்நிலையில் முதல் போட்டியிலேயே ஸ்டார்க் உள்ளே இருந்த நெருப்பை ஜெய்ஸ்வால் தேவையின்றி தட்டி எழுப்பியதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "மிட்செல் ஸ்டார்க் பொதுவாக சமநிலையுடன் இருக்கக்கூடியவர். அவர் அதிகம் கோபப்பட மாட்டார் என்பதை இப்போதும் நீங்கள் பார்க்கிறீர்கள். அப்படிப்பட்ட அவர் ஏதேனும் ஒரு பேட்ஸ்மேன் தன்னிடம் ஏதாவது சொன்னால் தனது முகத்தில் லேசான சிரிப்பால் மட்டுமே பதிலை கொடுப்பார்.

ஆனால் அந்த சிரிப்பின் பின்புறத்தில் அவருக்குள் நெருப்பு எரியும் என்று நினைக்கிறேன். அதன் காரணமாக 2-வது போட்டியில் அவர் அபாரமாக பந்து வீசினார் என்று பாருங்கள். கடந்த சில வருடங்களாக இருந்ததை விட அந்தப் போட்டியில் மிகவும் அற்புதமாக பந்து வீசிய அவர் அதிகமான பாராட்டுக்குரியவர்.

தற்போது அவரால் மீண்டும் தன்னுடைய கெரியரின் உச்சத்தைப் போல 150 கி.மீ வேகத்தில் வீச முடியும். பெரும்பாலும் அவர் 140 கி.மீ வேகத்திற்கு மேல் தொடர்ச்சியாக பந்து வீசுவது என்னைக் கவர்ந்துள்ளது. குறிப்பாக இளஞ்சிவப்பு நிற பந்தில் அவர் இன்னும் அபாரமாக செயல்படுகிறார். எனவே அவருடைய வேகம் எந்த வகையிலும் குறையவில்லை. அதனால் ஸ்டார்க், கமின்ஸ், ஹேசல்வுட் ஆகியோர் இன்னும் சில வருடங்கள் ஆஸ்திரேலிய அணிக்காக தொடர்ந்து விளையாட வாய்ப்புள்ளது" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்