பெண்கள் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

150 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது

Update: 2023-02-12 16:31 GMT

கேப்டவுன்,

8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. வருகிற 26-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்தும் இடம் பெற்றுள்ளன. இந்த போட்டி தொடரில் இன்று கேப்டவுனில் நடைபெறும் ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் ஜவேரியா கான் 8 ரன்களும் ,முனீபா அலி 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த நிதா தர் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் இழந்தாலும் அணியின் கேப்டன் பிஸ்மா மரூப் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார்.

அவர் அரைசதம் அடித்து அசத்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 149 ரன்கள் எடுத்தது.பிஸ்மா மரூப் 68 ரன்களும் , ஆயிஷா நசீம் 43 ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் ராதா யாதவ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 150 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடியது. இந்நிலையில், இந்திய அணி 19 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றிப்பெற்றது. இந்திய வீராங்கனை ஜெமீமா ரோட்ரிக்ஸ் அரை சதம் அடித்து (நாட்-அவுட்) 53 ரன்கள் எடுத்தார். ஷஃபாலி வர்மா 33 ரன்களும், ரிச்சா கோஷ் 31 ரன்களும் (நாட் அவுட்), யாஸ்திக பாட்டியா 17 ரன்களும், கவுர் 16 ரன்களும் எடுத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்