பெண்கள் பிரிமீயர் லீக்: வெளியேற்றுதல் சுற்று - மும்பை - பெங்களூரு அணிகள் இன்று மோதல்

லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Update: 2024-03-14 23:24 GMT

image courtesy: Women's Premier League (WPL) twitter

புதுடெல்லி,

2-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கடைசி இரு இடத்துக்கு தள்ளப்பட்ட உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் வெளியேறின.

2-வது, 3-வது இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் வெளியேற்றுதல் சுற்றில் இன்று (வெள்ளிக்கிழமை) மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோற்கும் அணி வெளியேறும்.

லீக் சுற்றில் 5 வெற்றி, 3 தோல்வியுடன் 2-வது இடம் வகித்த மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலம் வாய்ந்த அணியாக உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (2 அரைசதத்துடன் 235 ரன்), அமெலியா கெர் (188 ரன்), ஆல்-ரவுண்டர்கள் ஹெய்லீ மேத்யூஸ், நாட் சிவெர் நம்பிக்கை அளிக்கிறார்கள். பவுலிங்கில் அதிவேகமாக பந்து வீசக்கூடிய ஷப்னிம் இஸ்மாயில் (8 விக்கெட்) மிரட்டுகிறார்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 புள்ளிகளுடன் (4 வெற்றி, 4 தோல்வி) 3-வது இடத்தை பெற்றது. கேப்டன் மந்தனா (2 அரைசதத்துடன் 259 ரன்), எலிஸ் பெர்ரி (246 ரன்), விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் (226 ரன்) சூப்பர் பார்மில் உள்ளனர். ஆல்-ரவுண்டரான எலிஸ் பெர்ரி, மும்பைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். ஆஷா சோபனா (9 விக்கெட்), சோபி மோலினெக்ஸ் (8 விக்கெட்), ஸ்ரேயங்கா பட்டீல் (7 விக்கெட்) உள்ளிட்டோரும் பந்துவீச்சுக்கு வலு சேர்க்கிறார்கள்.

மும்பைக்கு எதிரான தொடக்க லீக்கில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த பெங்களூரு அணி மீண்டும் சந்தித்த போது மும்பையை 113 ரன்னில் சுருட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் புரட்டியெடுத்தது. இதனால் பெங்களூரு வீராங்கனைகள் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

மும்பை: ஹெய்லீ மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா, நாட் சிவெர், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), அமெலியா கெர், அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்ட்ராகர், ஹூமைய்ரா காஸி, சஜனா, ஷப்னிம் இஸ்மாயில், சாய்கா இஷாக்.

பெங்களூரு: மந்தனா (கேப்டன்), சோபி மோலினெக்ஸ், எலிஸ் பெர்ரி, சோபி டேவின், ரிச்சா கோஷ், வேர்ஹாம், திஷா கசாத், ஸ்ரேயங்கா பட்டீல், ஆஷா சோபனா, ஷிரத்தா போகர்கேர், ரேணுகா சிங்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்