பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் இன்று இரு ஆட்டங்கள்

பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்களில் உ.பி. வாரியர்ஸ்- குஜராத், மும்பை- டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.;

Update: 2023-03-20 00:02 GMT

image courtesy: Women's Premier League twitter

மும்பை,

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும். அதாவது புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடும். 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிசுற்றை எட்டும்.

இதுவரை 16 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் மும்பை இந்தியன்சும் (10 புள்ளி), டெல்லி கேப்பிட்டல்சும் (8 புள்ளி) பிளே-ஆப் சுற்றை எட்டி இருக்கின்றன. மீதமுள்ள ஒரு இடத்துக்கு உ.பி. வாரியர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மல்லுகட்டுகின்றன.

*3 வெற்றி, 3 தோல்வியுடன் உள்ள உ.பி. வாரியர்ஸ் அணி எஞ்சிய இரு லீக்கில் (குஜராத் மற்றும் டெல்லிக்கு எதிராக) ஒன்றில் வெற்றி பெற்றால் போதும். அடுத்த சுற்றை எட்டி விடலாம். சொல்லப்போனால் இன்றைய ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி விட்டால் மற்ற இரு அணிக்குரிய வாய்ப்பு தகர்ந்து விடும்.

*2 வெற்றி, 5 தோல்வியுடன் உள்ள பெங்களூரு அணி தனது கடைசி லீக்கில் நாளை பலம் வாய்ந்த மும்பையை அதிக வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அதே சமயம் உ.பி. வாரியர்ஸ் தனது கடைசி இரு லீக்கிலும் தோற்க வேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால் உ.பி., குஜராத், பெங்களூரு மூன்று அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அப்போது ரன்ரேட்டில் பெங்களூரு முன்னிலையில் இருந்தால் வாய்ப்பு கிட்டும்.

*4 புள்ளியுடன் உள்ள குஜராத் ஜெயன்ட்சை பொறுத்தவரை தனது இறுதி லீக்கில் உ.பி. வாரியர்சுக்கு எதிராக இமாலய வெற்றி பெற்று ரன்ரேட்டை உயர்த்த வேண்டும். மற்ற ஆட்டங்களின் முடிவும் சாதகமாக அமைந்து, உ.பி. வாரியர்சை விட ரன்ரேட்டில் முந்தினால் ஒரு வேளை குஜராத்துக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம்.

இன்று (திங்கட்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. சினே ராணா தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணி, அலிசா ஹீலே தலைமையிலான உ.பி. வாரியர்சை பிரபோர்ன்ஸ் ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு சந்திக்கின்றன. இரவு 7.30 மணிக்கு டி.ஒய். பட்டீல் ஸ்டேடியத்தில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை அணி முதலிடத்தை உறுதி செய்யும் முனைப்புடன் மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்