பெண்கள் ஐ.பி.எல். அணிகள் மூலம் ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் - இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்பார்ப்பு
பெண்கள் ஐ.பி.எல் கிரிக்கெட் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு குறைந்தது ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
முதலாவது பெண்கள் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது. இதில் 5 அணிகள் உருவாக்கப்படுகிறது. பெண்கள் ஐ.பி.எல். அணிகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டிய 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அதற்கான விண்ணப்பத்தை ரூ.5 லட்சம் செலுத்தி பெற்று சென்றன. ஆண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டை சேர்ந்த 10 அணிகளின் நிர்வாகமும், பெண்கள் அணிக்கான உரிமத்தை பெற முயற்சிப்பதும் இதில் அடங்கும். இதற்கான உரிமத்தை பெறப்போவது யார் என்பது நாளை தெரிந்து விடும்.
பெண்கள் ஐ.பி.எல் கிரிக்கெட் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு குறைந்தது ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 'சில நிறுவனங்கள் ரூ.500 கோடியில் இருந்து தங்களது ஏலத்தொகையை குறிப்பிட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு அணிக்கும் ரூ.800 கோடிக்கு மேல் உரிமத் தொகையாக கிடைக்கலாம் என்பதே கிரிக்கெட் வாரியத்தின் எண்ணமாகும். ஒருவேளை அந்த தொகை குறைந்தாலும் கவலைப்படபோவதில்லை' என்று ஏற்கனவே ஆண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் பணியாற்றிய நிபுணர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.