மகளிர் கிரிக்கெட்: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை...!
சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது இலங்கை அணி.
லண்டன்,
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயனம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அங்கு அந்நாட்டு மகளிர் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அதில் முதலாவது நடைபெற்ற டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையே நேற்று 2-வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தபத்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி இலங்கை வீராங்கனைகளின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். 18 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 104 ரன்களில் ஆல்அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக சார்லோட் டீன் 34 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் யாரும் 20 ரன்களை கூட தாண்டவில்லை. இலங்கை அணி தரப்பில் பிரபோதனி, பிரியதர்ஷினி, ரனவீரா மற்றும் கவிஷா தில்ஹாரி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் 105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியில் தொடக்க ஆட்டகாரர் அனுஷ்கா சஞ்சீவனி விரைவில் ஆட்டம் இழந்தாலும் கேப்டன் சமாரி அத்தபத்து இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். அணியை வெற்றி பாதையை நோக்கி வேகமாக பயணிக்க வைத்தார். 31 பந்துகளில் 55 ரன்கள் எடுத்த நிலையில் அத்தபத்து கேட்ச் முறையில் ஆட்டம் இழந்தார். பின்னர் களம் இறங்கிய வீராங்கனைகள் எளிதில் அணியை வெற்றி பெற வைத்தனர். 13.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்து இலங்கை அணி வெற்றி பெற்றது. இது சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி பதிவு செய்த முதல் வெற்றி ஆகும். இதற்கு முன்னர் விளையாடிய 10 போட்டிகளில் இலங்கை அணி தோல்வியே சந்தித்து இருந்தது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற சமனிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ளது.