தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பெண்களுக்கான 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி - சென்னையில் 26-ந் தேதி தொடக்கம்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பெண்களுக்கான 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி சென்னையில் 26-ந் தேதி தொடங்குகிறது.;
சென்னை,
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் இந்த ஆண்டுக்கான (2023-24) பெண்கள் 20 ஓவர் மற்றும் 50 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. பிரேயர் கோப்பைக்கான இந்த போட்டி சென்னை செங்குன்றத்தில் உள்ள ஸ்டேக் மற்றும் கேளம்பாக்கத்தில் உள்ள ஜூனியர் சூப்பர் கிங்ஸ் அகாடமி மைதானங்களில் நடக்கிறது.
இதில் பெண்களுக்கான 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. 29-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் கிரீன் இன்வாடெர்ஸ், சில்வர் ஸ்டிரைக்கர்ஸ், பிங்க் வாரியர்ஸ், புளூ அவெஞ்சர்ஸ், எல்லோ சேலஞ்சர்ஸ், ரெட் ரேஞ்சர்ஸ், ஆரஞ்ச் டிராகன்ஸ், பர்பிள் பிளாசர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தினசரி 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் முதல் ஆட்டம் காலை 8.45 மணிக்கும், 2-வது ஆட்டம் பகல் 12.45 மணிக்கும் தொடங்கி நடைபெறும்.
இதேபோல் பெண்களுக்கான 50 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூலை 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை அரங்கேறுகிறது. மேற்கண்ட 2 மைதானங்களில் நடைபெறும் இந்த போட்டியில் 20 ஓவர் போட்டியில் ஆடும் 8 அணிகளும் அப்படியே கலந்து கொள்கின்றன. இந்த போட்டியிலும் லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும். தினசரி 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் முதல் ஆட்டம் காலை 9 மணிக்கும், 2-வது ஆட்டம் காலை 9.15 மணிக்கு தொடங்கி நடைபெறும். போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு கோப்பை மற்றும் சிறந்த வீராங்கனைகளுக்கு விருது வழங்கப்படும்.
இந்த போட்டிக்கான ஒவ்வொரு அணிகளிலும் தலா 15 வீராங்கனைகள் இடம் பெறுவார்கள். இதில் 15, 19, 23 வயதுக்கு உட்பட்ட வீராங்கனைகள் மற்றும் சீனியர்கள் இடம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியின் முடிவில் 15, 19, 23 வயதுக்கு உட்பட்ட மற்றும் சீனியர் பெண்களுக்கான தமிழக அணி தேர்வு செய்யப்படும்.
இந்த தகவலை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணைசெயலாளர் கே.சிவக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பொருளாளரும், பிரேயர் இண்டர்நேஷனல் நிறுவன தலைவருமான ஸ்ரீனிவாசராஜ், நிதி இயக்குனர் ஸ்ரீராஜன், கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி உறுப்பினர் சுதா ஷா ஆகியோர் உடனிருந்தனர்.