இறுதிப்போட்டியில் கொல்கத்தாவுடன் மோதப்போகும் அணி எது? ஐதராபாத் - ராஜஸ்தான் இன்று மோதல்

இறுதிப்போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால், இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Update: 2024-05-24 00:24 GMT

சென்னை,

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை பந்தாடி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. நேற்று முன்தினம் நடந்த வெளியேற்றுதல் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வெளியேற்றி 2-வது தகுதி சுற்று ஆட்டத்துக்கு ஏற்றம் கண்டது.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த ஐதராபாத் சன் ரைசர்ஸ்- வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

முன்னாள் சாம்பியனான (2016-ம் ஆண்டு) ஐதராபாத் அணி லீக் சுற்றில் (8 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 17 புள்ளி) புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை பிடித்தது. நடப்பு தொடரில் 3 முறை 260 ரன்களுக்கு மேல் குவித்து மலைக்க வைத்த அந்த அணி முதலாவது தகுதி சுற்றில் 159 ரன்னில் முடங்கி தோல்வியை தழுவியது. அந்த ஆட்டத்தில் அதிரடி ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தது பின்னடைவை ஏற்படுத்தியது. அவர்கள் மீண்டும் ரன்வேட்டைக்கு திரும்பும் முனைப்புடன் காத்திருக்கிறார்கள்.

ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் ரியான் பராக் (4 அரைசதம் உள்பட 567 ரன்), கேப்டன் சஞ்சு சாம்சன் (5 அரைசதம் உள்பட 521), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ஒரு சதம், ஒரு அரைசதம் உள்பட 393) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஜோஸ் பட்லர் விலகலால் ஏற்பட்டு இருக்கும் சரிவை சமாளிக்க டாம் கோலர் காட்மோர், ஹெட்மயர், ரோமன் பவெல் பயனுள்ள பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், அவேஷ் கான், டிரென்ட் பவுல்ட், சந்தீப் ஷர்மா, அஸ்வின் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

இவ்விரு அணிகளும் ஏற்கனவே இந்த சீசனில் லீக் சுற்றில் ஒரு முறை சந்தித்துள்ளன. இதில் ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அத்துடன் முதலாவது தகுதி சுற்றில் செய்த தவறுகளை களைந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைய தீவிரம் காட்டும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்க ராஜஸ்தான் அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, மார்க்ரம் அல்லது கிளென் பிலிப்ஸ் அல்லது விஜயகாந்த் வியாஸ்காந்த், நிதிஷ்குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷபாஸ் அகமது அல்லது மயங்க் மார்கண்டே, கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷவர்குமார், நடராஜன்.

ராஜஸ்தான்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், டாம் கோலர் காட்மோர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரெல், ஹெட்மயர், ரோமன் பவெல் அல்லது கேஷவ் மகராஜ், அஸ்வின், டிரென்ட் பவுல்ட், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்.

 

Tags:    

மேலும் செய்திகள்