கம்பீர் அப்படி கூறியதில் தவறில்லை - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களுக்கு கங்குலி பதிலடி
விராட் கோலி குறித்த பாண்டிங்கின் கருத்திற்கு கம்பீர் கோபமாக பதிலடி கொடுத்தார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங், இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலியின் பார்ம் கவலையளிக்கும் விதமாக உள்ளதாகவும், டெஸ்ட் போட்டிகளில் 5 வருடத்தில் 3 சதங்கள் என்பது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரருக்கு உகந்ததாக இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். எனவே விராட் கோலி ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார்
இது குறித்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு முன்பாக தலைமை பயிற்சியாளரான கம்பீரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கம்பீர், "இந்திய அணியை பற்றி பேசுவதற்கு ரிக்கி பாண்டிங் யார்?. விராட் கோலி, ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவில் அசத்துவார்கள். பாண்டிங் ஆஸ்திரேலிய அணி குறித்து யோசித்தால் போதும்" என்று காட்டமாக பதிலடி கொடுத்தார். அவரது இந்த கருத்து பலரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதற்கு பாண்டிங் பதிலளித்தார். மேலும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களான ஹெய்டன், பிராட் ஹாடின், கில்கிறிஸ்ட், டிம் பெய்ன் போன்றவர்கள் கம்பீரை விமர்சித்தனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியர்கள் கூறும் கருத்துகளுக்கு அவர்களுடைய ஸ்டைலில் பதிலடி கொடுப்பதில் தவறில்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "அதை அப்படியே விடுங்கள் என்று நான் சொல்வேன். ஊடகங்களில் அவர் சொன்ன விஷயங்களுக்காக சில விமர்சனங்கள் எழுந்ததை நானும் பார்த்தேன். அதுவே கம்பீர் வழி. அது அப்படியே இருக்கட்டும். ஐபிஎல் வென்ற போதும் அவர் இப்படித்தான் இருந்தார். அப்போது நீங்கள் அவரை பாராட்டி பேசினீர்கள். தற்போது 3 டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கைக்கு எதிராகவும் தோல்வியை சந்தித்ததால் அவருடைய கருத்துக்கள் யாருக்கும் பிடிக்கவில்லை. ஆனால் அதுவே கம்பீருடைய வழியாகும்.
ஏன் அப்படி பேசக்கூடாது. நான் கிரிக்கெட்டை பார்க்கத் தொடங்கியது முதல் ஆஸ்திரேலியர்கள் உங்களிடம் இப்படிதான் கடினமாக நடந்து கொள்வார்கள். ஹெய்டன், பாண்டிங் அல்லது ஸ்டீவ் வாக் ஆகியோர் தங்களுடைய கிரிக்கெட்டையும் அப்படித்தான் விளையாடினார்கள். எனவே கம்பீர் அப்படி சொன்னதில் எந்த தவறும் இல்லை. இதுவே அவர் சண்டையிட்டு போட்டியிடும் விதமாகும். அவருக்கு வாய்ப்பு கொடுங்கள். 2 - 3 மாதங்கள் மட்டுமே செயல்பட்டதை வைத்து அவருடைய பயிற்சியை நீங்கள் மதிப்பிட வேண்டாம்" என்று கூறினார்.