ரோகித் இடத்தில் நான் இருந்திருந்தால்.... - இந்திய முன்னாள் கேப்டன்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகின.
மும்பை,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இதனையொட்டு 10 நாட்களுக்கு முன்பாகவே சென்ற இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கேப்டன் ரோகித் சர்மா மட்டும் அணியினருடன் செல்லவில்லை. தனது மனைவிக்கு குழந்தை பிறக்கும்போது அருகில் இருந்து கவனிக்கும் பொருட்டு அவர் ஆஸ்திரேலியா செல்லவில்லை. தற்போது குழந்தை பிறந்து விட்டதால் ரோகித் சர்மா விரைவில் ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்கும் முதல் டெஸ்டில் அவர் ஆடுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் அவர் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு அதிகரித்து இருக்கிறது.
இந்நிலையில் ரோகித் சர்மா எதிர்பார்த்த வேலை முடிந்து விட்டதால் நாட்டுக்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாட வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "ரோகித் சர்மா விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு செல்வார் என்று நினைக்கிறேன். ஏனெனில் இந்திய அணிக்கு அவருடைய கேப்டன்ஷிப் தேவைப்படுகிறது. அவருடைய மனைவி நேற்று ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் என்று நம்புகிறேன். எனவே அவர் ஆஸ்திரேலியாவுக்கு செல்வார் என்று உறுதியாக நம்புகிறேன். முடிந்தளவுக்கு அவர் வேகமாக ஆஸ்திரேலியா செல்ல வேண்டும்.
ஒருவேளை நான் அவருடைய இடத்தில் இருந்தால் பெர்த்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடுவேன். அந்த போட்டிக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. இந்த தொடருக்குப் பின் அவர் ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாடப் போவதில்லை. எனவே சிறந்த கேப்டனான ரோகித் சர்மா தலைமை தாங்குவது இந்தியாவுக்கு அவசியமாகிறது.
ஆரம்பத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்பட ரோகித் சர்மா விரும்பவில்லை. ஆனால் நீங்கள் உங்களுடைய கெரியரை டெஸ்ட் கேப்டனாக அல்லாமல் முடிக்க கூடாது என்று அவரிடம் பிசிசிஐ தலைவராக இருந்தபோது நான் கூறினேன். எனவே அவருடைய தலைமையில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதித்துள்ள விஷயங்களை பார்த்து நான் ஆச்சரியப்படவில்லை" என்று கூறினார்.