பார்டர் - கவாஸ்கர் முதல் டெஸ்ட்: பும்ரா தலைமையில் களமிறங்கும் இந்திய அணி..?
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டியிலிருந்து ரோகித் விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இதனையொட்டு 10 நாட்களுக்கு முன்பாகவே சென்ற இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கேப்டன் ரோகித் சர்மா மட்டும் அணியினருடன் செல்லவில்லை. தனது மனைவிக்கு குழந்தை பிறக்கும்போது அருகில் இருந்து கவனிக்கும் பொருட்டு அவர் ஆஸ்திரேலியா செல்லவில்லை. தற்போது குழந்தை பிறந்து விட்டதால் ரோகித் சர்மா விரைவில் ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து ரோகித் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முதல் போட்டிக்கான கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோகித் சர்மா 2-வது போட்டிக்கு முன் இந்திய அணியுடன் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.