உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல என்ன செய்ய வேண்டும்...? - முன்னாள் வீரர் கொடுத்த ஐடியா...!
இதுவரை நடந்து முடிந்த லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
கராச்சி,
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்த லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு முன்னேற நியூசிலாந்து, பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு வாய்ப்பு உள்ளது. அதில் நியூசிலாந்து அணி கிட்டத்தட்ட அரையிறுதிக்கு முன்னேறி விட்டது என்றே சொல்லலாம்.
ஏனெனில் 9 ஆட்டங்களில் ஆடி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து 4வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட்டும் (+0.743) நல்ல நிலையில் உள்ளது. பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் எஞ்சியுள்ள ஒரு லீக் ஆட்டத்தில் (இங்கிலாந்துக்கு எதிராக) மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்.
அதாவது, பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதிபெற வேண்டும் என்றால் (பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தால்) இங்கிலாந்து அணியை சுமார் 287 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் அல்லது (பாகிஸ்தான் 2வது பேட்டிங் செய்தால்) இங்கிலாந்து நிர்ணயிக்கும் இலக்கை 2.3 ஓவர்களில் அடித்து வெற்றி பெற வேண்டும். இதனால் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது எனலாம்.
இந்நிலையில் வாசிம் அக்ரம், மிஸ்பா உல் ஹக் போன்ற முன்னாள் வீரர்கள் ஏ ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்ல இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து மிகப்பெரிய ஸ்கோரை குவித்து விட வேண்டும்.
அதன் பின்னர் இங்கிலாந்து அணியை டிரஸ்ஸிங் ரூமில் வைத்து பூட்டி டைம்டு அவுட் முறையில் அவர்களை அவுட் ஆக்கிவிட வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்ல முடியும் என வாசிம் அக்ரம் கூறியதாக ஏ ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதை கேட்ட அங்கிருந்த வாசிம் அக்ரம் போன்ற முன்னாள் வீரர்கள் அனைவரும் சிரித்தார்கள். மேலும் அப்போது இங்கிலாந்து அணியை மொத்தமாக அறைக்குள் பூட்டி விட்டால் பாகிஸ்தான் வெல்லும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக்கும் கிண்டலான பதிலை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.