இதுவே நமக்கு நடந்திருந்தால்? இந்திய ரசிகர்களுக்கு அஸ்வின் கேள்வி..!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றி அசத்தியது.;
பெங்களூரு,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது.
இந்த தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் 212 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியும் 212 ரன்கள் அடிக்க ஆட்டம் சமன் ஆனது. இதனால் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.
அந்த வகையில் முதல் சூப்பர் ஓவரின்போது இரு அணிகளுமே 16 ரன்களை எடுத்ததால் 2-வது சூப்பர் ஓவருக்கு போட்டி நகர்ந்தது. அதில் விளையாடிய இந்திய அணி 11 ரன்களை மட்டுமே எடுக்க 12 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ஆப்கானிஸ்தானுக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ஆப்கானிஸ்தான் 1 ரன் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
முதல் சூப்பர் ஓவரில் முதலாவதாக பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி கடைசி பந்தை எதிர்கொண்டு சிங்கிள் எடுத்தார். அப்போது ரன் அவுட் செய்வதற்காக விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் பந்தை எடுத்து ஸ்டம்பை நோக்கி எறிந்தார். ஆனால் அந்த பந்து தன் மீது பட்டு வேறு பக்கம் சென்றதை பயன்படுத்திய முகமது நபி எக்ஸ்ட்ராவாக 2 ரன்கள் எடுத்தார். அதனால் கோபமடைந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா, எப்படி நீங்கள் ரன்கள் எடுக்கலாம்? என்று முகமது நபியிடம் வாதிட்டார்.
அதேபோல உடலில் பட்டதை பயன்படுத்தி நீங்கள் நேர்மை தன்மைக்கு புறம்பாக எக்ஸ்ட்ரா 2 ரன்கள் எடுத்ததாக நபியை இந்திய ரசிகர்களும் விமர்சித்தனர். ஆனால் அதே நிலைமை நமக்கு ஏற்பட்டால் இந்திய ரசிகர்கள் இப்படி சொல்வார்களா? என்று அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு;-"இந்திய கிரிக்கெட்டின் ஒரு ரசிகனாக இதை நான் சொல்கிறேன். அதாவது நாளை ஒரு உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியில் சூப்பர் ஓவரில் 1 பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்போது இப்படி எறிந்த பந்து நம்முடைய கையுறையில் பட்டால் நாமும் ரன்கள் எடுக்க ஓடுவோம்.
அந்த சூழ்நிலையில் ஒரு வீரர் ஏன் ரன் எடுக்க ஓடக்கூடாது? ஒரு பவுலர் விக்கெட்டை எடுப்பதற்காக பந்து வீசும்போதுதான் நீங்கள் ரன்கள் எடுக்க முடியும். அது உடலில் பட்ட பின் ஓடினால் லெக் பைஸ், படாமல் ஓடினால் பைஸ். அதேபோல பீல்டர் ரன் அவுட் செய்வதற்காகத்தானே பந்தை எறிகிறார்? அது என்னுடைய உடல் மீது பட்டு சென்றாலும் ரன் எடுப்பதற்கான உரிமையில் நான் ஓடுவேன். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கிரிக்கெட்டின் நேர்மை தன்மை எங்கே? மன்னிக்கவும்" என்று பேசினார்.