வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: 700 விக்கெட்டுகளை வீழ்த்திய 3-வது இந்தியர் - சாதனை படைத்த அஸ்வின்

அதிக முறை பேட்ஸ்மேன்களை போல்ட் ஆக்கிய இந்திய வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார்.

Update: 2023-07-13 17:03 GMT

டொமினிகா,

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் இந்திய அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட் , ஜடேஜா 3 விக்கெட் , ஷார்துல் தாகூர் , சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். போட்டியில் தனது 3-வது விக்கெட்டை அஸ்வின் வீழ்த்திய போது, சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய 3-வது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.

அதே போல் டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை பேட்ஸ்மேன்களை போல்ட் ஆக்கிய இந்திய வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார். இதுவரை அவர் 95 முறை பேட்ஸ்மேன்களை போல்ட் ஆக்கியுள்ளார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டேக்நரின் சந்திரபாலின் விக்கெட்டை அவர் வீழ்த்திய போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் தந்தை மகன் ஆகிய இருவரின் விக்கெட்டையும் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார். கடந்த 2011-ம் ஆண்டு டேக்நரின் சந்திரபாலின் தந்தை ஷிவ்நரின் சந்திரபாலின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தியிருந்தார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்