கடைசி 3 ஓவர்களில் 10 -15 ரன்கள் குறைவாக எடுத்ததாக நினைத்தோம் - வெற்றிக்கு பின் சுப்மன் கில் பேட்டி
குஜராத் தரப்பில் சுப்மன் கில் 104 ரன்னும், சாய் சுதர்சன் 103 ரன்னும் எடுத்தனர்.
அகமதாபாத்,
ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 231 ரன்கள் குவித்தது.
குஜராத் தரப்பில் சுப்மன் கில் 104 ரன்னும், சாய் சுதர்சன் 103 ரன்னும் எடுத்தனர். சென்னை தரப்பில் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 232 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் குஜராத் அணி 35 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் 63 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் மொகித் ஷர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் சதம் அடித்து அசத்திய சுப்மன் கில்லுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, பீல்டிங்கின் போது ஓய்வில் இருந்ததற்கு காலில் ஏற்பட்ட பிடிப்பு தான் காரணம். நீங்கள் நினைப்பது போல் எந்த காயமும் ஏற்படவில்லை. ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் ஆதரவாக இருந்தனர். அப்படியிருக்கும் போது, நிச்சயம் நம்மால் சாதிக்க முடியும்.
நாங்கள் பேட்டிங் செய்யும் போது என்ன இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்பது குறித்து யோசிக்கவே இல்லை. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்று நினைத்தோம். எனக்கும் சாய் சுதர்சனுக்கும் நல்ல புரிதல் உள்ளது. கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரிலும் நாங்கள் இருவருமே அதிகமாக இணைந்து விளையாடினோம்.
அவருடன் பேட்டிங் விளையாடுவது உற்சாகமாக உள்ளது. குஜராத் அணிக்கு இதுதான் சிறந்த தொடக்கம் என்று நினைக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளாக மொகித் ஷர்மா குஜராத் அணிக்காக சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். எல்லோருக்கும் சில போட்டிகள் மோசமாக அமையும். இன்று மொகித் ஷர்மாவின் பவுலிங் சிறப்பாக இருந்தது.
இந்த இன்னிங்ஸின் போது ஒரு கட்டத்தில் 250 ரன்கள் எடுக்க வாய்ப்புள்ளதை உணர்ந்தோம். ஆனால் கடைசி 2 - 3 ஓவர்களில் சி.எஸ்.கே அணியினர் நன்றாக பவுலிங் செய்தனர். அப்போது 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்ததாக நினைத்தோம். குறைவு என்று சொன்னதற்கு காரணம் நெட் ரன் ரேட்டிற்காக தான். இவ்வாறு அவர் கூறினார்.