'மைதானம் நாங்கள் கணித்ததை விட வேறு மாதிரி இருந்ததால் தோல்வியை சந்தித்தோம்' - டெம்பா பவுமா

உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி படுதோல்வி அடைந்தது.;

Update: 2023-11-06 05:42 GMT

image courtesy; AFP

கொல்கத்தா,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது.

இந்திய அணி தரப்பில் விராட் கோலி சதமும் (101 ரன்), ஸ்ரேயாஸ் அரைசதமும் (77 ரன்) அடித்து அசத்தினர். இதையடுத்து 327 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது.

இதில் இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி 27.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 243 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்நிலையில் கொல்கத்தா மைதானம் தாங்கள் கணித்ததை விட வேறு மாதிரி இருந்ததால் தோல்வியை சந்திக்க நேரிட்டதாக தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா கூறியுள்ளார். அத்துடன் 350 ரன்கள் தொடுவதற்கான துவக்கத்தை பெற்ற இந்தியாவை கட்டுப்படுத்தியும் சேசிங்கில் தோற்றதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "இந்த ஆட்டம் சவாலாக இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் நாங்கள் சேசிங்கில் தோற்றோம். சேசிங் பற்றி எங்களுடைய பேட்ஸ்மேன்களிடம் நாங்கள் பேசினோம். இந்தியா முதல் 10 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்தது. ஆனால் அதன் பின் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு ரன்ரேட்டை கட்டுப்படுத்தினோம்.

ரோகித் சர்மா நல்ல துவக்கத்தை கொடுத்தார். விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். நாங்கள் கணித்ததை விட வேறு மாதிரி பிட்ச் அமைந்தது. துரதிர்ஷ்டவசமாக எங்களால் அதற்கேற்ப விளையாட முடியவில்லை. இதே மைதானத்தில் நாங்கள் மீண்டும் அரையிறுதி சுற்றில் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்