'அதிகமான பந்துகளை ரன்னின்றி விரயமாக்குகிறோம்..' ஹர்மன்பிரீத் கவுர் கவலை
இந்திய அணி அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 41 பந்துகளில் ரன் ஏதும் எடுக்கவில்லை.
கெபேஹா,
பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் 5 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்ததுடன், 5-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தது.
முன்னதாக தோல்வியை தழுவிய இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சீராக ரன் எடுக்க முடியாமல் 51 பந்துகளை விரயமாக்கிய இந்திய பேட்டர்கள், அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 41 பந்துகளில் ரன் ஏதும் எடுக்கவில்லை. இது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறியதாவது:-
இங்கிலாந்துக்கு எதிரான லீக்கில் நாங்கள் நிறைய பந்துகளில் ரன் எடுக்கவில்லை. இது பற்றி ஏற்கனவே அணி வீராங்கனைகளின் கூட்டத்தில் ஆலோசித்துள்ளோம். ஆனால் சில சமயம் எதிரணி நன்றாக பந்து வீசும் போது இப்படி ஆகி விடுகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில், மோதும் இரு அணிகளும் எப்போதும் நெருக்கடிக்கு மத்தியில் தான் விளையாடுகின்றன. ஆனால் இது போன்ற ஆட்டங்களில் (அயர்லாந்துக்கு எதிராக 155 ரன் எடுத்தது) 150 ரன்களுக்கு மேல் எடுக்கும் போது நமது கை ஓங்கி விடும். நாங்கள் எங்களை அதிக நெருக்கடிக்குள்ளாக்குவதில்லை. களம் இறங்கி சூழலை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப விளையாடுகிறோம்.
20 ஓவர் கிரிக்கெட்டில் கணிசமான பந்துகளில் ரன் எடுக்காமல் (டாட் பந்து) விடுவது எங்களுக்கு கவலைக்குரியதாக இருக்கிறது. இந்த பகுதியில் முன்னேற்றம் காண விரும்புகிறோம். அடுத்து அரைஇறுதியில் நாங்கள் ஆஸ்திரேலியாவை சந்திக்க உள்ளோம். சமீபத்தில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஆடியது நிறைய நம்பிக்கையை தந்துள்ளது. அவர்களுக்கு எதிராக எப்படி திட்டமிட்டு ஆடுவது என்பது தெரியும்.
இவ்வாறு ஹர்மன்பிரீத் கவுர் கூறினார்.