"வைடு" வழங்காததால், நடுவரை பார்த்து கடும் கோபத்தில் கத்திய ஷகிப் அல் ஹசன்...! வைரல் வீடியோ

உள்ளூர் போட்டி ஒன்றில் வைடு வழங்காத நடுவரை பார்த்து ஷகிப் கத்தும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Update: 2023-01-08 05:01 GMT

image screengrab from வீடியோ tweeted by @SharyOfficial

டாக்கா,

இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெறுவது போன்று வங்காளதேசத்தில் பிபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் போது, நிதானத்தை இழந்து நடுவரை நோக்கி ஆக்ரோஷமாக ஷகிப் அல் ஹசன் கத்தும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வங்காளதேச தேசிய அணியின் கேப்டனாக வலம் வரும் அனுபவமிக்க வீரராக திகழ்பவர் ஷகிப் அல் ஹசன். பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் தனது திறமையை வெளிப்படுத்திவரும் அவர், அவ்வபோது மைதானத்தில் நிதானத்தை இழந்துவிடுகிறார்.

அதே போன்ற நிதானத்தை இழந்த சம்பவம் ஒன்று உள்ளூர் போட்டி ஒன்றில் அரங்கேறியுள்ளது. அதாவது ஷகிப் பேட்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது பந்துவீச்சாளர் பவுன்ஸ் ஒன்றை வீசினார். அது ஷகிப்பின் தலைக்கு மேலே சென்றது.

அது வைடுதான் என நினைத்து ஷகிப் லெக் அம்பயரை பார்க்க, லெக் அம்பயரோ வைடு வழங்காததால், ஆத்திரமடைந்த அவர், லெக் அம்பயரை பார்த்து மூன்று முறை ஆக்ரோஷமாக கத்தினார். மேலும், நடுவரின் அருகில் சென்று வைடு ஏன் வழங்கவில்லை எனக்கூறி கடும் வாக்குவாதம் செய்தார்.

எனினும், நிதானத்துடன் பேசிய நடுவர், ஓவரின் முதல் பவுன்சர் என்பதால், வைடு வழங்கவில்லை என்று தெரிவித்தார். இருந்தாலும், கோபம் தீராத ஷகிப், நடுவரின் முடிவில் திருப்தி இல்லாது கானப்பட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2021 ஆம் ஆண்டு டாக்கா பிரீமியர் லீக்கில் ஷாகிப், நடுவர் முடிவில் அதிருப்தியடைந்து ஸ்டம்புகளை பிடுங்கி தரையில் அடித்து நொறுக்கும் அளவுக்கு நிதானத்தை இழந்திருந்தார். இருப்பினும், பின்னர் தனது கோபத்திற்காக மன்னிப்பு கேட்டார். என்னைப் போன்ற ஒரு அனுபவமிக்க வீரர் அப்படி நடந்து கொள்ளக்கூடாது என்றும் அவர் கூறியிருந்தார்.

ஆனால், இப்போது வரையிலும் மைதானத்தில் தனது கோபத்தை கட்டுப்படுத்த தவறுகிறார் என்பதே இது காட்டுகிறது.  

 

Tags:    

மேலும் செய்திகள்