வார்னர், மார்ஷ் அதிரடி சதம்...ஆஸ்திரேலியா 367 ரன்கள் குவிப்பு...!

ஆஸ்திரேலிய அணி தரப்பில் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் சதம் அடித்து அசத்தினர்.

Update: 2023-10-20 12:30 GMT

Image Courtesy: AFP

பெங்களூரு,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைப்பெற்று வரும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் பெங்களூருவில் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர், மார்ஷ் ஆகியோர் களம் இறங்கினர்.

இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய இந்த இணை மைதானத்தில் நாலாபுறமும் சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தியது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் அடித்து அசத்தினர். இந்த இணை முதலாவது விக்கெட்டுக்கு 259 ரன் எடுத்த நிலையில் மார்ஷ் 121 ரன்னில் அவுட் ஆனார்.

இதையடுத்து களம் இறங்கிய மேக்ஸ்வெல் 0 ரன், ஸ்மித் 7 ரன் எடுத்து அவுட் ஆகினர். இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வார்னர் 163 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து மார்கஸ் ஸ்டோனிஸ், ஜோஷ் இங்க்லிஸ் ஜோடி சேர்ந்தனர். இதில் இங்க்லிஸ் 13 ரன், ஸ்டோனிஸ் 21 ரன் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து மார்னஸ் லபுஸ்சேன் மற்றும் பேட் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தனர்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 367 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் வார்னர் 163 ரன், மார்ஷ் 121 ரன் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 368 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி ஆட உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்