விராட் கோலி 'கிங்' கிடையாது - பாக்.முன்னாள் வீரர் கருத்து

விராட் கோலியை ரசிகர்கள் அனைவரும் ‘கிங் கோலி’ என்று அழைப்பர்.

Update: 2024-08-20 17:25 GMT

image courtesy: AFP

லாகூர்,

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். கடந்த 2008-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு இந்தியாவின் மேட்ச் வின்னராக அவதரித்தார்.

அப்போதிலிருந்து உலகின் அனைத்து எதிரணிகளையும் பந்தாடி வரும் அவர் 26000+ ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். மூன்று வகையான கிரிக்கெட்டிலும் மாபெரும் பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் விராட் கோலி இன்றளவும் வளர்ந்து வரும் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். அதேபோல நிறைய வெளிநாட்டவர்களும் அவரை பின்பற்றுகின்றனர்.

இதனிடையே கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய 16வது வருட பயணத்தை விராட் கோலி நிறைவு செய்துள்ளார். இதையடுத்து விராட் கோலிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக களத்தில் இவர் காட்டும் ஆக்ரோஷத்தின் காரணமாக ரசிகர்கள் இவரை 'கிங் கோலி' என்று அழைப்பது வழக்கம்.

இந்நிலையில் விராட் கோலி மொத்தம் 19 வருடங்கள் விளையாடுவார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி கூறியுள்ளார். அதே சமயம் அனைவரும் அழைப்பது போல விராட் கோலி கிங் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏனெனில் கிரிக்கெட்டை விட இங்கு யாருமே பெரியவர் கிடையாது என்று அவர் கூறியுள்ளார். ஆனால் விராட் கோலி மகத்தான பேட்ஸ்மேன் என்று பாராட்டும் பாசித் அலி இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"இது சிறப்பான சாதனை. விராட் கோலி 16 அல்ல இன்னும் 3 வருடம் விளையாடி மொத்தம் 19 வருடங்கள் விளையாடுவார். ஏனெனில் சூப்பர் பிட்டாக உள்ள அவர் அர்ப்பணிப்பை கொண்டவர். விராட் கோலியை பாருங்கள். அதற்கு பெயர்தான் அர்ப்பணிப்பு. சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், யூனிஸ் கான், ராகுல் டிராவிட் போன்றவர்கள் அர்ப்பணிப்பின் காரணமாகவே நீண்ட காலம் விளையாடினர். இன்றைய குழந்தைகள் பாபர் அசாம் இப்படி கவர் டிரைவ் அடிக்கிறார். விராட் கோலி அப்படி விளையாடுகிறார் என்று கூறுகிறார்கள். இருப்பினும் அதற்கு முன் அவர்கள் அதிக பயிற்சி செய்வதாலேயே போட்டியில் கச்சிதமாக விளையாடுகின்றனர்.

ஆனால் கிங் என்று சொல்வதால் விராட் கோலியே மோசமாக உணர்வார். அவரிடம் கேட்டால் கூட தம்மை கிங் என்று அழைக்காதீர்கள் என்றே சொல்வார். ஏனெனில் கிரிக்கெட்டை விட இங்கே யாரும் பெரியவர் கிடையாது. தன்னுடைய பேட்டிங் மற்றும் ரன்களை பற்றி பேசினால் விரும்பக்கூடிய விராட் கோலி கிங் என்று சொல்லாதீர்கள் என்றே சொல்வார். ஏனெனில் டான் பிராட்மேன், கவாஸ்கர், சச்சின் கூட தங்களை கிங் என்று சொன்னதில்லை. எனவே விராட் கோலி கிங் கிடையாது. தற்சமயத்தில் அவர் மகத்தான பேட்ஸ்மேன்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்