'விராட் கோலி இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்' - கவுதம் கம்பீர் பாராட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றியோடு தொடங்கியுள்ளது.

Update: 2023-10-09 09:53 GMT

சென்னை,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மல்லுக்கட்டின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி இந்திய வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்களில் ஆட்டமிழந்தது.

200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான இஷான் கிஷன், ரோகித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர் என அடுத்தடுத்து மூன்று வீரர்கள் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். இதன்காரணமாக இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன் பின்னர் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த கே.எல் ராகுல் அற்புதமாக இன்னிங்சை கட்டமைத்தார். அவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்க்கவே இந்திய அணி வெற்றியை நோக்கி எளிதாக சென்றது. குறிப்பாக விராட் கோலி 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து இருந்தாலும் கே.எல் ராகுல் 97 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் நின்று இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றிருந்தார்.

இந்நிலையில் இந்த ஆட்டத்தின் போது இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி விளையாடிய விதம் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், 'வளர்ந்து வரும் இளம் வீரர்கள் விராட் கோலியின் பிட்னஸை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். இன்றளவும் விராட் கோலி, விக்கெட்டுகளுக்கு இடையில் ரன்களை எவ்வளவு வேகமாக ஓடி எடுக்கிறார் என்று பாருங்கள். அதோடு டாட் பால்களை குறைத்துக் கொண்டு தொடர்ச்சியாக 1,2 ரன்கள் எடுத்து பவுலர்களின் மீது அழுத்தத்தை கொடுக்கிறார். அவரை போன்று ரிஸ்க் இல்லாமல் டாட் பாலை குறைத்துக் கொண்டு ஸ்ட்ரைக் ரோடேட் செய்வதை இளம் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். விராட் கோலி இளம் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார்' என கவுதம் கம்பீர் பாராட்டியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 116 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்