சமாதானப்படுத்த முயற்சித்தேன்..இருப்பினும்..- டிராவிட் குறித்து ரோகித் உருக்கம்

இந்திய அணியின் பயிற்சியாளராக தமக்கு டிராவிட் நிறைய உதவிகளை செய்ததாக ரோகித் கூறியுள்ளார்.

Update: 2024-06-05 12:11 GMT

image courtesy:PTI

நியூயார்க்,

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவி காலம் தற்போது நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது. அவர் மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை.

இந்நிலையில் 2006-ல் இந்தியாவுக்காக தாம் அறிமுகமான முதல் போட்டியில் ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்ததாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணியின் பயிற்சியாளராக தமக்கு அவர் நிறைய உதவிகளை செய்ததாகவும் ரோகித் கூறியுள்ளார். அதனால் டிராவிட் விடை பெறுவது தமக்கு கடினமான உணர்வைக் கொடுப்பதாக தெரிவிக்கும் ரோகித் சர்மா, தொடர்ந்து பயிற்சியாளராக இருக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"அயர்லாந்துக்கு எதிராக நான் அறிமுகமான முதல் சர்வதேச போட்டியில் அவர்தான் கேப்டனாக இருந்தார். அதேபோல டெஸ்ட் அணிக்கு நான் முதல் முறையாக தேர்வானபோதும் அவரே கேப்டனாக இருந்தார். அவர் எங்களுக்கு மிகப்பெரிய ரோல் மாடல். நாங்கள் அவரைப் பார்த்து வளர்ந்தோம். அவர் என்ன சாதித்துள்ளார் எப்படிப்பட்ட வீரர் அணிக்காக என்ன செய்தார் என்பதை நாங்கள் அறிவோம்.

அவர் கடினமான நேரங்களில் அணிக்காக கடுமையாக போராடியவராக அறியப்படுகிறார். எனவே தொடர்ந்து அணியுடன் இருக்குமாறு அவரிடம் நான் பேசி சமாதானப்படுத்த முயற்சித்தேன். இருப்பினும் அவரும் தன்னுடைய சொந்த வாழ்வில் பல்வேறு விஷயங்களை பார்க்க வேண்டியுள்ளது. அவருடன் தனிப்பட்ட முறையில் நான் மகிழ்ச்சியுடன் வேலை செய்தேன். எங்களுடைய மற்ற வீரர்களும் இதையே சொல்வார்கள் என்று நம்புகிறேன். இதைத் தவிர்த்து நான் வேறு எதுவும் சொல்லப் போவதில்லை. அவர் பதவியில் இருந்து விலகுவது கடினமாக இருக்கிறது" என்று உருக்கத்துடன் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்