டி.என்.பி.எல். கிரிக்கெட்: 52 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி
சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றிபெற்றது.
கோவை,
7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இதன்படி கோவையில் இன்று நடைபெற்ற போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி சேப்பாக் அணி வீரர்கள் அதிரடியாக ரன்கள் குவிப்பில் ஈடுபட்டனர். இதனால் சேப்பாக் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. சேப்பாக் அணியின் சார்பில் அதிகபட்சமாக பிரதோஷ் ரஞ்சன் 88 (55) ரன்களும் , ஜெகதீசன் 35 (27) ரன்களும், பாபா அபராஜித் 29 (19) ரன்களும், சஞ்சய் யாதவ் 31 (12) ரன்களும் எடுத்தனர். சேலம் அணியின் சார்பில் அதிகபட்சமாக சன்னி சந்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சேலம் அணியினர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.
இறுதியில் சிக்சர்களாக அடித்து அதிரடி காட்டிய முகமது ஆத்னன் கான் 47 (15 பந்துகள்) ரன்கள் குவித்தார்.
முடிவில் சேலம் அணி 20 ஒவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. சேலம் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆத்னன் கான் 47 ரன்களும், ஆகாஷ் சர்மா 24 (27) ரன்களும், கவுசிக் காந்தி 23 (20) ரன்களும் எடுத்தனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக பாபா அபராஜித், விஜு அருள் மற்றும் ராக்கி பாஸ்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் ஹரிஷ் குமார், ரகில் ஷா, மற்றும் சிலம்பரசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றிபெற்றது.