இந்திய அணியின் அடுத்த டி20 கேப்டனாக அந்த 2 வீரர்கள் தயார் - சபா கரீம்
சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா ஓய்வை அறிவித்தார்.
மும்பை,
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி இந்தியா வரலாறு படைத்திருக்கிறது.
இந்த வெற்றியுடன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
இதற்கு முன் ரோகித் கேப்டன் ஆனதிலிருந்து இந்திய அணி 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டி ஆகியவற்றில் தோல்வி அடைந்து இருந்தது. இருப்பினும் மனம் தளராமல் 2024 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியை சரியாக வழி நடத்தி ரோகித் சர்மா வெற்றி பெற வைத்தார்.
ரோகித் ஓய்வு பெற்றுள்ள நிலையில் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் ரோகித் சர்மாவின் இடத்தை நிரப்ப ஹர்திக் பாண்ட்யா மற்றும் சூர்யகுமார் யாதவ் தயாராக உள்ளதாக முன்னாள் வீரர் சபா கரீம் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-
"முதலில் டி20 அணியின் கேப்டன் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும். ஏனெனில் ரோகித் சர்மா ஓய்வு பெற்று விட்டார். எனவே நீங்கள் புதிய கேப்டனை நியமித்தாக வேண்டும். அதற்கு 2 பேர் தகுதியுடன் இருப்பதாக நான் கருதுகிறேன். முதலில் டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா இருந்தார். எனவே அவர் அந்த இடத்திற்கு வர வேண்டும். கடந்த காலங்களில் அவர் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அடுத்த 2 வருடங்களில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தகுந்தாற்போல் நம்முடைய தயாரிப்பு இருக்க வேண்டும்.
அதே போல கடந்த வருடம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் சூர்யகுமார் கேப்டனாக செயல்பட்டார். இந்தியா வெற்றி கண்ட அந்தத் தொடரில் நன்றாக பேட்டிங் செய்த அவரும் வருங்காலத்தில் நல்ல தேர்வு. எனவே ஹர்திக் பாண்ட்யா வெற்றிக்கு முக்கிய பங்காற்றுபவராகவும் கேப்டனாகவும் செயல்படத் தகுதியானவர் என்று தேர்வாளர்கள் கருதினால் அவரைத் தேர்ந்தெடுக்கலாம். அந்த வகையில் உங்களுக்கு கேப்டனாக 2 வீரர்கள் தயாராக உள்ளனர்" என்று கூறினார்.