டி20 கிரிக்கெட்டில் எங்களுடைய நோக்கம் இதுதான் - சூர்யகுமார் யாதவ்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

Update: 2024-11-14 09:09 GMT

செஞ்சூரியன்,

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் 3-வது 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 107 ரன்களும், அபிஷேக் சர்மா 50 ரன்களும் அடித்தனர்.

இதனையடுத்து 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இந்தியா 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக மார்கோ ஜான்சன் 54 ரன்கள் அடித்து வெற்றிக்கு போராடினார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப்சிங் 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்த போட்டியில் அடைந்த வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், "இந்த வெற்றி உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் அணியின் ஆலோசனை கூட்டத்தின்போது கூட இது குறித்துதான் அதிகம் பேசியிருந்தோம். நிச்சயம் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவது மட்டுமேதான் எங்களுடைய பாணியாக இருக்கும் என்று கருதினோம். எனவே அனைவரும் அதிரடியாக விளையாட திட்டமிட்டோம்.

ஐ.பி.எல். தொடரில் இதேபோன்ற அதிரடியான ஆட்டத்தைதான் வெளிப்படுத்துகிறோம். அதே போன்று வலைப்பயிற்சியிலும் அதிரடியாக விளையாட முயற்சிக்கிறோம். அந்த வகையிலே இந்த போட்டியிலும் அனைத்து பேட்ஸ்மேன்களும் மிகச்சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி. இது போன்ற மற்ற வீரர்களின் ஆட்டம் ஒரு கேப்டனாக என்னுடைய பணியை எளிதாக்குகிறது. அதுமட்டுமின்றி இந்த போட்டியில் பீல்டிங்கிலும் எங்களது வீரர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்