பார்டர் கவாஸ்கர் தொடரை இந்த அணி கைப்பற்றும் - இலங்கை முன்னாள் வீரர் கணிப்பு...!
4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது.;
கொழும்பு,
ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்ததுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9-ம் தேதி தொடங்குகிறது.
2014-க்குப்பின் அனைத்து பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்களை தொடர்ச்சியாக வென்று வரும் இந்தியா 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவை வரலாற்றில் முதல் முறையாக அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து சரித்திர சாதனையுடன் கோப்பைகளை வென்றது.
அது போக 2004-க்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் 2012-க்குப்பின் உலகின் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்காமல் வெற்றி நடைபோட்டு வரும் இந்தியா இம்முறையும் வென்று கோப்பை கைப்பற்ற வாய்ப்புள்ளது.
இந்நிலையில் இந்த முறை பார்டர் கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறும் என இலங்கை முன்னாள் ஜாம்பவான் வீரர் மகிலா ஜெயவர்தனே கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
இத்தொடரின் முடிவை கணிப்பது கடினமாகும். இருப்பினும் ஆஸ்திரேலியா வெல்லும் என்று நம்புகிறேன். குறிப்பாக 2- 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும். ஆனால் அது மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. எப்படி பார்த்தாலும் இது மிகச் சிறந்த தொடராக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ஆஸ்திரேலியா நல்ல பந்து வீச்சு கூட்டணியை கொண்டிருப்பதால் இந்திய சூழ்நிலைகளில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலர்களை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே இத்தொடரின் வெற்றி அமையலாம்.
அத்துடன் இத்தொடரை இரு அணிகளும் எவ்வாறு ஆரம்பிக்கின்றன என்பதை பொறுத்தும் வெற்றியாளர் அமையலாம். மொத்தத்தில் இது மிகச் சிறந்த தொடராக அமையப் போகிறது .
இவ்வாறு அவர் கூறினார்.