2024 டி20 உலகக்கோப்பையை இந்த அணி தான் வெல்லும் - இங்கிலாந்து முன்னாள் வீரர்
இங்கிலாந்து நடப்பு சாம்பியன் தான் இருந்தாலும் தற்போது அவர்களது செயல்பாடு சிறப்பாக இல்லை.;

Image Courtesy: Twitter
லண்டன்,
2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.
அதன்படி அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா மற்றும் உகாண்டா ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்நிலையில் 2024 டி20 உலகக்கோப்பை தொடரை தென் ஆப்பிரிக்கா தான் வெல்லும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசர் ஹூசைன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
நான் ரொம்ப அதிகமாக அலசி ஆராய்ந்து கொண்டிருக்கவில்லை. இந்த முறை தென் ஆப்பிரிக்கா கோப்பையை வெல்லும் என்று கருதுகிறேன். இங்கிலாந்து நடப்பு சாம்பியன் தான் இருந்தாலும் தற்போது அவர்களது செயல்பாடு சிறப்பாக இல்லை. சொந்த மண்ணில் நடப்பதால் கோப்பையை வெல்ல வெஸ்ட் இண்டீசுக்கு ஓரளவு வாய்ப்பு உண்டு.
தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் மோதும் என்பதே எனது கணிப்பு. தென் ஆப்பிரிக்காவை பொறுத்தவரை உள்ளூரில் எஸ்.ஏ.20 ஓவர் லீக் போட்டியில் ஆடுவது அந்த அணி வீரர்களுக்கு தங்களது திறமையை மேம்படுத்திக் கொள்ள உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.