ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோல்வி அடைந்ததற்கு இதுதான் காரணம் - இலங்கை கேப்டன் மெண்டிஸ் பேட்டி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கையும், ஆப்கானிஸ்தானும் மோதின.

Update: 2023-10-31 01:15 GMT

Image Courtesy: AFP

புனே,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கையும், ஆப்கானிஸ்தானும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி ஆப்கானிஸ்தானின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இலங்கை 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 241 ரன்களே எடுத்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக நிசாங்கா 46 ரன்கள் அடித்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் பரூக்கி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 242 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி ஆடியது.

ஆப்கானிஸ்தான் அணி நிதானமாக ஆடி 45.2 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 242 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வி குறித்து இலங்கை கேப்டன் குசல் மெண்டிஸ் கூறியதாவது,

நாங்கள் போதுமான அளவு இந்த போட்டியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. அதோடு இன்னும் நிறைய ரன்களை குவித்திருக்க வேண்டும். 300 ரன்கள் அல்லது 280 ரன்கள் வரை அடித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் எங்களால் அந்த அளவிற்கு ரன்களை அடிக்க முடியவில்லை. அதோடு எங்களது பந்துவீச்சாளர்கள் முதல் பத்து ஓவரில் மிகச் சிறப்பாக பந்து வீசி இருந்தனர்.

இருப்பினும் அதன்பிறகு மைதானத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. பனியின் காரணமாக எங்களது சுழற்பந்து வீச்சாளர்களால் பந்தினை கிரிப் செய்து வீச முடியவில்லை. பனியின் காரணமாக இரண்டாம் பாதியில் மைதானம் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது. மதுஷாங்கா கடந்த சில போட்டிகளாகவே சிறப்பாக விளையாடியிருக்கிறார். அவரது செயல்பாடு எதிர்காலத்திலும் சிறப்பாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்