நான் பேட்டிங் செய்த போது வந்த மெசேஜ் இதுதான்...சதம் அடித்த பின் விராட் கோலி அளித்த பேட்டி...!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடின.
கொல்கத்தா,
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது.
இந்திய அணி தரப்பில் விராட் கோலி சதமும் (101 ரன்), ஸ்ரேயாஸ் அரைசதமும் (77 ரன்) அடித்து அசத்தினர். இதையடுத்து 327 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக், பவுமா ஆகியோர் களம் இறங்கினர். இதில் டி காக் 5 ரன்னிலும், பவுமா 11 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இதையடுத்து களம் இறங்கிய வான் டர் டுசென் 13 ரன், மார்க்ரம் 9 ரன், க்ளாசென் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து டேவிட் மில்லர் மற்றும் மார்கோ யான்சென் ஜோடி சேர்ந்தனர். இதில் மில்லர் 11 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 27.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 83 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 243 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த ஆட்டத்தில் சதம் அடித்த பின்னர் இன்னிங்ஸ் இடைவேளையில் (தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்வதற்கு முன்) விராட் கோலி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
இந்த மைதானம் பேட்டிங் செய்ய சற்று சவாலாக இருந்தது. ஆனாலும் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். அதோடு தொடக்க ஓவர்கள் கடந்து மிடில் ஓவர்களின் போது பந்து சற்று நின்று திரும்பி வந்தது. மேலும் 10 ஓவர்களுக்கு பிறகு பந்து மிகவும் மெதுவாக ஆனதால் நான் இறுதிவரை சற்று கவனத்துடன் விளையாட எண்ணினேன்.
அப்படி நான் விளையாடும் போது டீம் மேனேஜ்மென்டிடம் இருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் நான் இந்த போட்டியை இறுதிவரை நின்று விளையாட வேண்டும் என்றும் என்னை சுற்றி மற்ற வீரர்கள் விளையாடுவார்கள் என்றும் எனக்கு அவர்கள் செய்தி அனுப்பி இருந்தனர்.
அதன்படியே நான் இறுதிவரை நிற்க வேண்டும் என்று ஒருபுறம் நிலைத்து நின்று விளையாடினேன். மற்றொருபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஹர்த்திக் பாண்ட்யா இந்த தொடரில் இல்லை என்பதால் ஒன்று இரண்டு விக்கெட்டுகளை விட்டால் கூட அது எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே போட்டியில் கடைசிவரை நான் நிற்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படி விளையாடியதால் சதமும் அடித்தேன். இப்படி எனக்கு இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு அளித்த கடவுளுக்கு நன்றி. பிறந்தநாளில் இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் மத்தியில் நான் சதம் அடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.