இது எங்களுக்கு முதல் படி - டி20 உலகக்கோப்பை தோல்வி குறித்து தென் ஆப்பிரிக்கா கேப்டன்

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா தோல்வியை தழுவியது.

Update: 2024-06-30 12:49 GMT

பார்படாஸ்,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வந்த 9-வது டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் அடித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா கிளாஸெனின் அதிரடியால் இலக்கை நோக்கி வேகமாக முன்னேறியது. இருப்பினும் இறுதி கட்டத்தில் இந்திய அணி, அபாரமாக பந்து வீசி தென் ஆப்பிரிக்காவை 169 ரன்களில் கட்டுப்படுத்தியது. இதன் மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் தங்களுடைய பேட்ஸ்மேன்களும் பவுலர்களும் நன்றாகவே விளையாடியதாக தென் ஆப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம் கூறியுள்ளார். ஆனால் அதையும் தாண்டி வென்ற இந்தியாவுக்கு தலைவணங்குவதாகவும் அவர் பாராட்டியுள்ளார். அதே சமயம் கடினமாக போராடிய தங்களை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவிக்கும் அவர் வருங்காலத்தில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இது வெற்றியை நெருங்கிய ஒரு படியாகும். இது போன்ற பெரிய கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்வது எளிதல்ல. அதில் கோப்பையை வென்ற இந்தியா போன்ற அணிக்கு நீங்கள் தலை வணங்க வேண்டும். ஏனெனில் அதில் கடினமான உழைப்பு இருக்கும். நாங்களும் வெற்றியை ஒரு படி நெருங்கியுள்ளோம்.

கண்டிப்பாக வருங்காலங்களில் நாங்கள் முன்னோக்கிச் சென்று அந்த முதல் வெற்றியை பெறுவோம் என்று நம்புகிறேன். ஆனால் இம்முறை தோல்வியை சந்தித்ததால் மனமுடைந்துள்ளேன். ஒரு அணியாக நன்றாக விளையாடி வந்த நாங்கள் தோல்வியை சந்தித்ததால் அதிலிருந்து மீண்டு வர கொஞ்சம் நேரம் தேவைப்படும். இருப்பினும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் ஏற்கனவே சொன்னது போல் இது கொஞ்சம் வலிக்கிறது.

எங்கள் வீரர்கள் மற்றும் அணிக்காக பெருமைப்படுகிறேன். எங்களுடைய பவுலர்கள் நன்றாக பந்து வீசினர். அதேபோல பிட்ச்சில் நிறைய வேலை செய்ய வேண்டியிருந்தது என்றும் நினைக்கவில்லை. ஏனெனில் நாங்கள் இந்தியாவை ஓரளவு நன்றாக கட்டுப்படுத்தி சேசிங் செய்யக்கூடிய இலக்கை பெற்றோம். அதைத் தொடர்ந்து பேட்டிங்கிலும் நாங்கள் நன்றாகவே செயல்பட்டதாக நினைக்கிறேன். இருப்பினும் கடைசியில் அது தவறி சென்றது" இவ்வாறு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்